முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2021, 7:31 PM IST
Highlights

செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், போன்றவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைத்துள்ளது. அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்  அமமுகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளரும், டிடிவி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவருமாகவும் இருந்தவர் பழனியப்பன்.  அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆவார்.ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர்  டிடிவி தினகரன் அணியுடன் செயல்பட்டு அதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார். 

இவர் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார், கட்சி துவங்கியபோது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து மூன்றாவது இடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டது. அமமுக வின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அமமுக வகித்த மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. இந்நிலையில் அமமுக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதுமட்டுமின்றி, கட்சியின் தலைமை மற்றும் அதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் அக்கட்சியின் மீது பலரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தவர்களுக்கு ஸ்டாலின் கௌரவமான பதவிகளை கொடுத்து வருகிறார். 

செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், போன்றவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைத்துள்ளது. அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார், விரைவில் தங்க தமிழ்ச் செல்வனுக்கு எம்.பி பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் போல பழனியப்பனும் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது, இந்நிலையில் டிடிவி தினகரனின் முக்கிய விசுவாசியும், அவரின் வலதுகரமாக செயல்பட்டுவந்த பழனியப்பன் அமமுகவில் இருந்து விலகி இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களாகவே யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அது உண்மையாகியுள்ளது. பழனியப்பன் அமாமுகவில் இருந்து விலகி இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரைத் தொடர்ந்து இன்னும் பலரும் அக்கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன. 
 

click me!