தனிமைப்படுத்திக்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...? மாவட்ட ஆட்சியர் தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 6, 2020, 1:30 PM IST
Highlights

முதியவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு நேற்று காலை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களுக்கு கிடைத்தது. அதில் முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதில் முதியவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களை உடனடியாக தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த 71 வயது முதியவர், கடந்த மார்ச் 15ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையிலும் இவருக்கு ஒரு வீடு உள்ளதால், அங்கேயே தங்கினார். இவரது குடும்பத்தினர் அனைவரும் கீழக்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது மூத்த மகன் மட்டும், சென்னை சென்று தனது தந்தையுடன் தங்கியிருந்தார்.

துபாயில் இருந்து திரும்பிய 3 நாட்களில் முதியவருக்கு கடுமையான சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனைக்கு செல்லாமல் மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனாலும், காய்ச்சல் சற்றும் குறையவில்லை. இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த மருத்துவர்கள் இவர் துபாயில் இருந்து வந்ததை அறிந்து, உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  கடந்த 2ம் தேதி மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவர், மூச்சுத் திணறல் காரணமாக கிசிச்சை பெற்றார் என்று ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் மருத்துவர்கள் அவரது இரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டு, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இறந்தவரின் உடலை கீழக்கரை எடுத்துச் சென்று, இறுதி மரியாதைக்காக அவரது வீட்டில் வைத்துள்ளனர். தொழிலதிபர் என்பதால் அவரது உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இறுதிச் சடங்கில் 300 பேர் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், முதியவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு நேற்று காலை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களுக்கு கிடைத்தது. அதில் முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதில் முதியவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களை உடனடியாக தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,  இறுதிச்சடங்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதால் பலருக்கும் கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை பரிசோதனை செய்ய உள்ளனர். இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!