ஜெயக்குமார் மீண்டும் திருச்சியில் கைதா? தொண்டர்கள் அதிர்ச்சி..!

By Ajmal KhanFirst Published Mar 25, 2022, 12:06 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  நிபந்தனை ஜாமினில் திருச்சியில் தங்கி இருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் நிலையில் மீண்டும் கைது செய்ய இருப்பதாக தகவல் பரவி இருப்பது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த ஜெயக்குமார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக வந்த தகவலையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்ற ஜெயக்குமார், அங்கிருந்த திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை  அரைநிர்வாண படுத்தியதாக புகார் எழுந்தது.  இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகள்  பதியப்பட்டு  மீண்டும் கைது செய்யபட்டார். உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதையடுத்து 19 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்தார். திருச்சியில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனையில்  அடிப்படையில்  ஜெயக்குமார் திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து அதன் அருகிலுள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள்,புதன், வெள்ளி ஆகிய தினங்களில் கையெழுத்திட்டு வருகிறார் அப்பொழுது பத்திரிக்கையாளர்களை சந்தித்து திமுக அரசை விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு

 திருச்சியில் தங்கியிருந்த நாட்களில் பல்வேறு மாவட்ட அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தும், தங்களது  ஆதரவை தெரிவித்தும் வந்தனர்.  தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஜெயக்குமாரை சந்தித்தது அவருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் மதிய உணவிற்காக திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று அதிமுக தொண்டர்களோடு தொண்டர்களாக அமர்ந்து உணவு அருந்தினார். இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில்   காவல்நிலையத்தில் கையெழுத்திட ஜெயக்குமார் செல்லும் போதும் ஏராளமான அதிமுகவினர் காவல்நிலையம் அருகே கூடி வருகின்றனர்.  இதனால் கொரோனா விதிகளை மீறி கூட்டம் கூடியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில் நீதிமன்றம் நிபந்தனை இன்றோடு  முடிவடைய உள்ள நிலையில் காவல் நிலையத்திற்கு ஜெயக்குமார் கையெழுத்திட வந்தார்.  அப்போது ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கூடி இருந்தனர். இதன்  காரணமாக  அந்த இடத்தில் ஒரு பதற்றமான சூழல் உருவானது இதனையடுத்து காவல்நிலையம் அருகே அதிமுக தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வராமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. 

கைது  பற்றி கவலை இல்லை

இந்த சூழ்நிலையில்  காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களுக்கு கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,  காவல்துறையினர்  அதிமுகவினரை அடித்து விரட்டியதற்கு கண்டனம் தெரிவித்தவர், காவல் துறை அராஜகமாக நடந்து கொண்டதாகவும்  குற்றம்சாட்டினார்.  அப்போது செய்தியாளர் ஒருவர் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாக கேள்வி எழுப்பினார், இதற்கு  பதில் அளித்த ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் விமான நிலையமோ அல்லது முக்கிய இடத்திற்கோ வந்தால் கட்சியினர் ஆர்வமோடும், எழுச்சியோடும் வரவேற்க தான் செய்வார்கள் என கூறினார்.  இந்த எழுச்சியை திமுக அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையெனவும் தெரிவித்தார். இதனை பொறுத்து கொள்ள முடியாமல் தான் வழக்குகள் பதியப்படுவதாகவும் தெரிவித்த அவர்,இது  அரசர் ஆட்சியோ, மன்னர் ஆட்சியோ இல்லை  மக்கள் ஆட்சி என கூறினார்.  நீதிமன்றம் என்று ஒன்று உள்ளதாக தெரிவித்தவர், எனவே  அதை பற்றி தங்களுக்கு கவலை இல்லையென்றும் தெரிவித்தார்.

click me!