
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளர் திடீரென சசிகலாவை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் சட்டமன்றத்திற்கு நுழைந்துள்ளது அதிமுக. ஆனால் அதற்கு அடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் வரலாறு காணாத அளவுக்கு அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. 90 சதவீத இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. 138 நகராட்சிகளில் 124ஐ திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தத்தில் அதிமுக துடைத்தெறியப்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.
இந்நிலையில் அதிமுக தொண்டர்களே ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையை விமர்சிக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. பலரும் எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை அழிவுப்பாதைக்கு எடுத்து செல்வதாக கூறிவருகின்றனர். அவர்களிடமிருந்து கட்சியை பாதுகாக்க சசிகலா தலைமைக்கு வர வேண்டும் என்று பேச்சு தற்போது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரீப். இவர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். திடீரென சசிகலா சந்தித்து அதிமுகவிற்கு தலைமை ஏற்க வாருங்கள் என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது முகமது ஷெரிப், முன்னாள் நகர செயலாளர் சேகர், பேச்சாளர் தம்பி ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர் சங்கர், சிறுபான்மை பிரிவு மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து விசாரித்த போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஷெரீப் கவுன்சிலர் சீட் கேட்ட நிலையில், அடுத்த முறை வாய்ப்பு வழங்குவதாகவும் தற்பொழுது களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களுக்கு வேலை செய்ய வேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால் முகமது ஷெரீப் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை, இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவை சந்தித்து அதிமுகவை காப்பாற்றுங்கள் என விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அழைத்து கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.