அம்மாவின் சாதனையை ஸ்டாலினும் செய்ய வேண்டும்.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அதிரடி

By Raghupati RFirst Published Dec 12, 2021, 11:08 AM IST
Highlights

முல்லை பெரியார் விவகாரத்தில் புரட்சித்தலைவி அம்மா செய்த சாதனையை தமிழக முதல்வர் ஸ்டாலினும் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணை மிகவும் பலமாக உள்ளது என்று பல்வேறு தொழில்நுட்ப மத்திய அரசின் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தொடர்ந்து கேரளா அரசின் முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிந்து 136 அடியிலிருந்து 142 அடியாக நீரை தேக்கிக் கொள்ளலாம் என்ற மாபெரும் வரலாற்று தீர்ப்பை புரட்சித்தலைவி அம்மா பெற்றுத் தந்தார்கள். இரு மாநில மக்கள் நல்லுறவை தான் விரும்புகின்றனர்.

ஆனால் கேரளத்தைச் சேர்ந்த நடிகர்களும், அரசியல்வாதிகளும் அணை பலவீனமாக உள்ளது என்று தொடர்ந்து வதந்திகளையும், பீதிகளையும் பரப்புகின்றனர். கேரளா அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மக்கள் உரிமையை காப்போம் என்று கூறுகின்றனர். அதற்காக நம் உரிமையை பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த அணையின் முழு பராமரிப்பு தமிழக அரசின் கைகளில்தான் உள்ளது. அது மட்டுமல்லாது,  142 அடியை தொட்டவுடன் உடன் 10 மதகுகளை தமிழக அரசு திறந்துவிட்டது தான் நடைமுறை.

தற்போது கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.  இதை விசாரித்த நீதியரசர்கள், கேரளா அரசின் இடைக்கால மனு மீது பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். ஆகவே வருகின்ற 15ஆம் தேதி ஒரு விரிவான, உண்மைத் தன்மையான நம் உரிமையை காத்திடும் வண்ணம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.  தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பும் கேரளத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு,  152 அடியை முல்லைப் பெரியாறு அணையில் தேக்கும் நாள்தான் தென்மாவட்ட மக்களின் பொன்னான நாள் ஆகும்’ என்று கூறினார்.

click me!