Pattali Makkal Katchi : “முதலில் குடும்பம், பிறகு தான் கட்சி..“ தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த ராமதாஸ் !

By Raghupati RFirst Published Dec 12, 2021, 10:28 AM IST
Highlights

எனக்கு சொந்தங்களும் பாட்டாளிகள் தான்,சொத்துகளும் பாட்டாளிகள் தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே,எனக்கு சொந்தங்களும் பாட்டாளிகள் தான்,சொத்துகளும் பாட்டாளிகள் தான்.அந்த உரிமையில் தான் பாட்டாளிகளுக்கு அரசியலைக் கடந்தும் அறிவுரைகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.சங்க காலத்திலிருந்து பாட்டாளிகளுக்கு வழக்கமாக நான் கூறி வரும் அறிவுரை தான் இது. இளைய தலைமுறை பாட்டாளிகளும் அறிந்து கொள்வதற்காக மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்.

பாட்டாளிகள் அனைவரும் காலையில் எழுந்த பிறகு, தாயிற்சிறந்த கோயில் இல்லை என்பதற்கிணங்க முதல் பணியாக தாயின் காலைத் தொட்டு வணங்க வேண்டும். ஒரு வேளை தாயார் இல்லை என்றால் அவரது புகைப்படத்தை தொழ வேண்டும். அடுத்து முகச்சவரம் செய்து விட்டு, குளிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை குளிப்பாட்டி, பள்ளிகளுக்கு அனுப்ப தயார் செய்தல், உணவூட்டி மகிழ்தல், பள்ளிக்கு புறப்படுவதற்கு முன் கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாடுதல், குழந்தைகளின் உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துதல் ஆகியவற்றை செய்ய வேண்டும். குடும்பம் சார்ந்த மனைவியின் தேவைகள், உதவிகள் இருந்தால் அதையும் நிறைவேற்ற வேண்டும். 

இப்படியாக ஒவ்வொரு நாளும் குடும்பத்தினருடன் சில மணி நேரம் செலவிட்ட பிறகு தங்களின் தொழில் அல்லது பணியை கவனிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட்டாளியும் இந்தப் பணிகளை தவறாமல் செய்ய வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு பாட்டாளியின் குடும்பமும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். சொந்தக் குடும்பத்தின் இத்தகைய தேவைகளை நிறைவேற்றும் பாட்டாளி தான் பொதுவாழ்வில் பணி செய்யும் தகுதியைப் பெறுகிறான். அதனால், குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி, குடும்பத்திற்குத் தேவையான வாழ்வாதாரத்தை ஈட்டி விட்டு, அதன் பின்னர் மீதமுள்ள நேரத்தில் அரசியல் பணி செய்ய வாருங்கள் என்பது தான் எனது அறிவுரை.

அவ்வாறு அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றி விட்டு, கட்சிப் பணியாற்ற வந்தால் போதுமானது. கட்சிப் பணியாற்றுவதற்காக ஒதுக்கும் நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் நாம் விரும்பும் இலக்கை நம்மால் எளிதாக எட்டி விட முடியும். ஆகவே, பாட்டாளிகளே, குடும்பக் கடமைகளை நிறைவேற்றி விட்டு, முழு மூச்சுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படுங்கள். குடும்பங்களும் முன்னேறட்டும், கட்சியும் வளரட்டும். புதியதோர் தமிழகம் படைப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

click me!