
இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை விமர்சித்து 4 நீதிபதிகள் தில்லியில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீதித்துறையின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாவது குறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம்.
அப்போது அவர் கூறியது... "மக்களுக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஓய்வு பெற்ற நீதிபதிகள் அமைப்பிலும் இது குறித்தெல்லாம் நாங்கள் விவாதித்திருந்தோம். இப்போது, அது வெளிப்படையாக வந்துள்ளது. என்றோ வரவேண்டியது இப்போது வந்துள்ளது... என்று கூறினார்.
மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இந்திய நீதித்துறை குறித்து, பொது மக்களுக்கு உள்ள நல்ல அபிப்ராயத்தை சீர்கெடுப்பது போல், நீதிபதிகளின் இந்த பேட்டி அமைந்துவிடாதா என்று கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மக்களுக்கும் நீதித்துறை மீது விமர்சனங்கள் இருந்து கொண்டேதான் உள்ளன. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததே தவறு என்றுதான் நான் கூறுவேன். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில், பல டெலிகாம் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்த பிறகு, கீழ் நீதிமன்றம், தவறு ஏதும் நடந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை என கூறி விடுதலை செய்ததே" என்றார் அவர்.