முன்னாள் ராணுவ அமைச்சர் பாரிக்கர் மகனுக்கு பாஜகவில் சீட் மறுப்பு.. ஆம் ஆத்மியில் போட்டியிட கெஜிரிவால் அழைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2022, 5:52 PM IST
Highlights

பாரிகரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், உத்பல் வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட விரும்பவில்லை, பானாஜியைதான் அவர் விரும்பினார். " பனாஜி எங்களுக்கு அரசியல் பிரச்சினை என்பதை விட கௌரவப் பிரச்சனை"

பாரிக்கர் குடும்பத்தை பாஜக " யூஸ் அண்ட் த்ரோ "  செய்துள்ளது என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார். கோவா முன்னாள் முதல்வரும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கருக்கு பாஜக சீட் வழங்க மறுத்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கரை ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். பாரிக்கரின் குடும்பத்தையே பாஜக யூஸ் அண்ட் த்ரோ கொள்கையில் அணுகியுள்ளது, இதனால் கோவா மக்கள் பாஜக மீது கொந்தளிப்பில் உள்ளனர், மனோகர் பாரிக்கர்ஜியை எப்போதும் மதிக்கிறேன், ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து போட்டியிட உத்பல்ஜியை வரவேற்கிறேன் என கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கோவாவில் 40 தொகுதிகளுக்கு வரும் பிப்- 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கே திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளதால் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிவசேனாவுடன் என்சிபி கட்சிகள் இணைந்து போட்டியிடுவதால் பாஜக வாக்குகள் பிரியும்  நிலை உருவாகியுள்ளது. பாஜக கோவா மாநிலத்தில் வளர, அசைக்க முடியாத சக்தியாக உருவாக அக்காட்சியை கட்டமைத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும்மான மறைந்த மனோகர் பாரிக்கர் ஆவார். கோவா மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்தார் அவர். கோவாவில் பாஜக என்றாலே அது மனோகர் பாரிக்கர்தான் என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு ஆதி முதலே கண்ணும் கருத்துமாக கோவாவில் பாஜகவை வளர்த்தார் அவர். 

ஆனால் துரதிஸ்டவசமாக அவர் மறைந்தார், அதன் பிறகு அவரின் அரசியல் வாரிசாக அவரது மகன் உத்பல் பாரிக்கர் கட்சிப் பணிகளை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்திற்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் கோவா தலைநகர் பனாஜியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். உத்பல்க்கு நிச்சயம் சீட்டு வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் கோவா சட்டமன்ற தேர்தலுக்கான 34 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை இன்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதில் உத்பால் பாரிக்கரின் பெயர் இல்லை... கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சன்குலிம்  தொகுதியிலும்,  துணை முதல்வர் மனோகர் அஜ்கான் மார்கான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பட்டியலை வெளியிட்ட தேவேந்திர பட்னாவிஸ் உத்பல் பாரிக்கர்வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,  நாங்கள் முன்வைக்கும் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறோம் என டுவிஸ்ட் வைத்து பேசியுள்ளார்.

மனோகர் பாரிக்கரின் கோட்டையான பனாஜியில்  தனக்கு சீட் வழங்க வேண்டும் என உத்பல் பாரிக்கர் கேட்டிருந்தார், ஆனால் அந்த தொகுதி அடானாசியோவுக்கு  வழங்கப்பட்டுள்ளது, இதனால் அவரை வேறு இடத்தில் போட்டியிடுமாறு பாஜக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது, ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில்தான் உத்பல் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். பாரிக்கரின் மகன் உத்பல் க்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது கோவா பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பட்னாவிஸ், எங்கள் கட்சியை பொறுத்தவரையில் பாரிக்கர் குடும்பம் எப்போதும் எங்கள் குடும்பம், ஆனால் உத்பல் போட்டியிட விரும்பிய தொகுதியில் ஏற்கனவே ஒரு சிட்டிங் எம்எல்ஏ இருக்கிறார். அவரை தொகுதியை கைவிடுமாறு கேட்பது நியாயமாக இருக்காது, இருப்பினும் நாங்கள் இவருக்கு மாற்று வழிகளை கூறியுள்ளோம், அவர் விரும்பினால் அடுத்த இரண்டு இடங்களில் ஒன்றில் போட்டியிடலாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாரிகரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், உத்பல் வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட விரும்பவில்லை, பானாஜியைதான் அவர் விரும்பினார். " பனாஜி எங்களுக்கு அரசியல் பிரச்சினை என்பதை விட கௌரவப் பிரச்சனை"  கடந்த ஒரு மாதமாக அமித்ஷா ஜேபி நட்டா போன்ற முக்கியத்தலைவர் உத்பலை சமாதானம் படுத்த முயன்று வருகின்றனர் எனக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் உத்பல் பனாஜி தொகுதியை தவிர்த்து வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடலாம் என மாநில கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. கடந்த 2019-இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறியவர்தான் அடானாசியோ மான்செராட்டோ, இவரே பனாஜியில் போட்டியிடுவார் என்பதில் பாஜக தலைமை உறுதியாக உள்ளது. ஏனெனில் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு நெருக்கடியான நேரத்திலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் அடானாசியோ என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்பல் ஒத்துப்பார் 1994 முதல் தனது தந்தையுடன் இருந்த பாஜக தலைவர்கள் தற்போது தனக்கு ஆதரவு அளிப்பதாகவும், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து பனாஜி வாக்காளர்களை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் மறைந்த மனோகர் பாரிக்கர் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சி சீட்டு வழங்குமா? என அவர் ஏற்கனவே கேள்வி எழுப்பி வந்தார் என்பது குறப்பிடதக்கது. மொத்த த்தில் உத்பல் பாரிக்கருக்கு பாஜக பனாஜியை வழங்க மறுத்துள்ளது. இந்நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்பல் பாரிக்கர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பனாஜியில் போட்டியிடலாம் என அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மியை போலவே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உத்பல் சுயேட்சையாக போட்டியிட்டால், பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் அவரது வேட்புமனுவை ஆதரிப்பர் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

click me!