ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, 11 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்ததற்காக அவரைத் தாக்க முற்பட்டார்களா? அல்லது முதல்வர் பதவியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என அறிவித்ததற்காக அடித்தீர்களா?
அதிமுக கட்சியை ஒழிக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டார்கள். இந்த கட்சி ஜாதி கட்சியாக மாறிவிட்டது என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என எம்.பி. சி.வி.சண்முகம் நேற்று தெரிவித்தார். இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அதிகாரத்தை பயன்படுத்தியே சி.வி.சண்முகம் மாநிலங்களவை எம்.பி. ஆகி இருக்கிறார், அப்படியென்றால் அதுவும் செல்லாது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக பொதுக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என காமெடி செய்து வருகிறார். 23 தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது, எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகிறது எனக் கூறினால், எதற்காக அதனை தயார் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- உட்கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள்.. ஐகோர்ட்டுக்கே அட்வைஸ் செய்யும் சி.வி. சண்முகம்..!
அங்கு உள்ளவர்கள் சி.வி. சண்முகத்திற்கு பயப்படுகின்றனர். டிசம்பர் 1ம் தேதி செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் 5 வருடம் வரை நீட்டிக்கலாம். அது எம்ஜிஆர்ரால் கொண்டு வரப்பட்ட பைலா. அதனை திருத்தப் போய் தான் தற்பொழுது சர்ச்சை நீடித்து வருகிறது. ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, 11 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்ததற்காக அவரைத் தாக்க முற்பட்டார்களா? அல்லது முதல்வர் பதவியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என அறிவித்ததற்காக அடித்தீர்களா? ஒரு வருடத்திற்கும் முன்பே, அனைத்தையும் விட்டுக் கொடுத்தால் தங்களுக்கு செக் வைப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினேன். தற்போது அவ்வாறு நடைபெற்று உள்ளது.
பொதுக்குழு செல்லாது என சி.வி. சண்முகம் கூறினார். அப்படி என்றால் அவர் எம்.பி.யாக இருக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி, பொதுமக்கள் விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தீர்மானங்கள் எழுதி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தூக்கி எறியப்பட்ட முதல் கூட்டம் இதுதான். ஐகோர்ட் நீதிபதி கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்துள்ளார்கள். குழப்பத்தை உண்டாக்கி அனைவரின் பதவியும் போவதற்கு சி.வி.சண்முகம் காரணமாக அமைகிறார். அதிமுக கட்சியை ஒழிக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டார்கள். இந்த கட்சி ஜாதி கட்சியாக மாறிவிட்டது என புகழேந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியவர் இவர்தானா? சிக்கிய பரபரப்பு காட்சிகள்.!