சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தங்கமணி மின்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. காலை 6:30 மணிக்கு முதல் தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. 2016-20 வரையிலான பணிக்காலத்தில், வழக்கின் முதல் குற்றவாளியான பி.தங்கமணி, இரண்டாவது குற்றவாளியான அவரின் மகன், மூன்றாவது குற்றவாளியான அவரின் மனைவி மூலம் 7 கோடி மதிப்பிலான சொத்து பெறப்பட்டுள்ளது. மதுவிலக்கு, மின்சாரத்துறை இரண்டிலும் தங்கமணி அமைச்சராக இருந்தார். இந்த துறைகளில் முறைகேடு நடந்து இருப்பதாக ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.
undefined
முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் தரணீதரன் 2வது குற்றவாளியாகவும், மனைவி சாந்தி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்ஐஆரில் இவர்களின் பெயர்களிலும் சொத்துக்கள் சேர்க்கப்பட்டு உள்ளது.எந்த தொழிலும் செய்யாத நிலையில் தங்கமணி மனைவி வருமான வரி கட்டியது எப்படி எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று காலை 6 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை, தமிழகம் முழுவதும் இன்றைய ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை என்று தெரிந்த அதிமுக தொண்டர்கள், தங்கமணி வீட்டின் முன்பு கூடி, கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.’பொய் வழக்கு போடாதே’, ‘மக்களை கண்டுகொள்ளாத விடியல் அரசே’ என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.’
ஆலாம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, புதுப்பாளையத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் பங்களா, முனியப்பா நகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் TKS பங்களா, பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரிவீடு, PKPN மில் அலுவலகம், மருமகன் தினேஷ் பங்களா, சம்மந்தி சிவாவின் தம்பி திருமூர்த்தி வீடு என குமாரபாளையம் தொகுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் சோதனையை செய்து வருகின்றனர்.
இதனால் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை விரிவுப்படுத்தி உள்ளனர். நாமக்கல்லில் அவருக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்களான நாமக்கல்லில் உள்ள சத்தியமூர்த்தி இல்லம் மற்றும் அலுவலகம், நல்லிபாளையத்தில் உள்ள தென்னரசுவின் அலுவலகம் என பல இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றார்கள்.
பெரியப்பட்டியில் உள்ள கோழி மருந்து விநியோகஸ்தர் மோகனின் வீடு, பரமத்தி வேலூர் அடுத்த வெங்கரையில் அதிமுக இலக்கிய அணியை சேர்ந்த விஜி என பட்டியல் நீள்கிறது. சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் அறை திறக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தங்கமணியின் நண்பரும், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரருமான குழந்தைவேலு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டம் குரங்குசாவடி பகுதியில் உள்ள குழந்தைவேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகனான தினேஷ் குமாருக்கு சொந்தமான ஸ்ரீ பிளைவுட்ஸ் மற்றும் ஜெயஸ்ரீ டைல்ஸ் & வுட்ஸ் நிறுவனம் ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் செயல்பட்டுவருகிறது. அந்த நிறுவனத்தின் சென்னை கிளை அலுவலகம் அரும்பாக்கத்தில் உள்ளது. அங்கும்,சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர், செனாய் நகர், பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களிலும் சோதனை நடக்கிறது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என்று கூறுகிறார்கள்.முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெறும் சோதனையானது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.