ஜெயலலிதா இருந்தபோது மன்னிப்பு கிடைக்கும். ஆனால் இப்போது யார் தவறுசெய்தாலும் தண்டனை கிடைக்கும். அதிமுக அமைச்சர்

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2021, 1:13 PM IST
Highlights

இதன் மூலம் விரைவாக அனைத்து பகுதிகளின் கோவில் புனரமைப்பு நடைபெறும், சிலை திருட்டு தடுப்பு குழு மூலமாக அனைத்து பணிகளும் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் முள்ளிப்பாடி எம்.ஆர்.எஸ் நகரில் புதிதாக கட்டப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். 

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் புதிதாக 9 மண்டல இணை ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும் என  அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இணை ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. விரைவாக அனைத்து திருக்கோவில்களும் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தும் விதமாக பதினொரு மண்டலமாக இருந்ததை 20 மண்டலமாக பிரித்து அரசு செயல்படுத்தி உள்ளது. 

இதன் மூலம் விரைவாக அனைத்து பகுதிகளின் கோவில் புனரமைப்பு நடைபெறும், சிலை திருட்டு தடுப்பு குழு மூலமாக அனைத்து பணிகளும் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்கும் பணி நடைபெறும், என்றார். அவரைத்  தொடர்ந்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது: கோவில் நிலங்களில் எங்கெங்கு ஆக்கிரமிப்பு உள்ளதோ அவற்றை அகற்ற அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எந்த நடவடிக்கை எடுத்தாலும் சம்பந்தபட்டவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றனர். 

நீதிமன்ற நிலைப்பாடு காரணமாக ஆக்கிரமிப்பு எடுப்பதில் சிக்கல் உள்ளது. ஜெயலலிதா இருக்கும் போது இருந்ததை விட அறநிலையத்துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு முன்பு இருந்ததுதான் ஆனால் தற்போது அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம். ஜெயலலிதா இருந்தபோது தான் மன்னிப்பு கிடைக்கும், ஆனால் இப்போது யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும். பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அறநிலைத்துறை இடம் மட்டுமல்ல வனத்துறை இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கையகப்படுத்தி வருகிறோம் என்றார். 
 

click me!