அதற்காக என்னை எல்லோரும் மன்னித்துவிடுங்கள்... ஊர் ஊராகவும் மன்னிப்பு கேட்பதாக கமல்ஹாசன் ஓபன் டாக்!

By Asianet TamilFirst Published Mar 31, 2021, 9:54 PM IST
Highlights

அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக ஊர் ஊராகச் சென்று மன்னிப்பு கேட்டு வருகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “அரசியலுக்கெல்லாம் ஆள் இருக்கிறார்கள் என நினைத்து நாம் நமது வேலையைப் பார்ப்போம் என எனது வேலையை மட்டுமே பார்த்துகொண்டிருந்தேன். அது தவறு என்பது 25 ஆண்டுக்கு கழித்து புரிந்துகொண்டேன். அதற்காகத்தான் தற்போது ஊர் ஊராகச் சென்று மன்னிப்புக் கேட்டு வருகிறேன். இப்போது ஒரு முடிவோடுதன் நான் வந்திருக்கிறேன். கட்சி தொடங்கியபோது இதே மதுரையில் ஒன்றைச் சொன்னேன். என்னுடைய எஞ்சிய வாழ்நாட்கள் மக்களுக்குக்காகத்தான் எனச் சொன்னேன். இந்த முடிவோடுதான் வந்திருக்கிறேன். இது வெறும் வசனம் என்று நினைக்க வேண்டாம். 
நீங்க நல்லாத்தான் பேசுறீங்க. ஆனால், காசைக் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டு சென்றுவிடுவார்கள் எனச் சொல்கிறார்கள். காசை கொடுத்தா கூட்டம் அப்படியே போய்விடும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், நான் இல்லை என்கிறேன். இந்தக் கூட்டம் காசு கொடுத்து சேர்ந்த கூட்டம் அல்ல. நீங்கள் காசை வாங்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்திடம் சொல்லத் தேவையில்லை. ஆனால், மற்றவர்களிடம் சொல்வோம். காசு வாங்குவதால் உங்கள் ஏழ்மை போகவே போகாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு உங்களது வாழ்க்கையை குத்தகைக்கு எடுக்கும் கூட்டம்தான் மக்களை மாறிமாறி ஏமாற்றுகிறார்கள். ஆனால், அதை செய்ய நாங்கள் வரவில்லை. தமிழக அரசியலைப் புரட்டிப்போட வந்திருக்கும் கட்சிதான் மக்கள் நீதி மய்யம்.
ஓர் ஊழல் கட்சி ஆண்டு கொண்டிருக்கிறது. அதற்கு மாற்று, மற்றொரு ஊழல் கட்சியல்ல. அதற்கு மாற்று நேர்மையான கட்சியே. புதிதாக ஓட்டுப்போட வருகிறவர்கள் புதிதாக அரசியலைப் புரட்டிப்போட வருகிறார்கள்.  இளைஞர்கள், பெண்களே, மனசாட்சி உள்ளவர்களே, நேர்மையானவர்களே உங்கள் சின்னம் என்ன என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். டார்ச் லைட் உங்கள் சின்னம். நான் உங்கள் கருவி, மக்கள் பணி செய்ய வந்திருக்கிறேன். எனது கரத்தை வலுப்படுத்துங்கள்.” என்று கமல்ஹாசன் பேசினார்.
 

click me!