வெளிநாட்டில் சொத்து  குவிப்பு : முன்னாள் மத்திய அமைச்சர் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

First Published Jun 25, 2018, 11:32 AM IST
Highlights
Foreign assets Former Federal Minister for Family egmore in court


சென்னை : சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகியுள்ளார். இதேபோல் நளினி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதியும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி மற்றும் செஸ் குளோபல் அட்வைஸரி சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ள சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை வழக்கு தொடர்ந்தது. 

இதுதொடர்பாக கறுப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேருக்கும், செஸ் குளோபல் நிறுவனத்துக்கும் வருமானவரித் துறை கடந்த ஏப்ரல் 13-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில்  ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 2 சொத்துகள், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கியது குறித்தும், வங்கிக் கணக்குகள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவர்கள் சார்பில் வருமானவரித் துறைக்கு விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கறுப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வருமானவரித் துறை புகார் மனு தாக்கல் செய்தது.

இதை ஏற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குற்றம்சாட்டப்பட்ட நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மற்றும் செஸ் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோர் ஜூன் 25-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இதனையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகியுள்ளனர். 

click me!