
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக இந்தியாவில் முதன் முறையாக 70 நுண் பார்வையாளர்கள் பயன்படுத்தபட உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என 62 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
மேலும் சில கட்சிகள் வெளியூர் அடியாட்கள் மூலமாக பணபட்டுவாடா செய்து குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற தந்திரமாக செயல்பட்டு வருவதாக தேர்தல் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த புகார்களை அடுத்து தேர்தல் அதிகாரிகளும் பல தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பணபட்டுவாடா செய்த சிலரை கைதும் செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இன்று தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் முதல் முறையாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 70 நுண் பார்வையாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இந்த 70 நுண் பார்வையாளர்களும் மத்திய அரசு ஊழியர்கள் ஆவார்கள்.
இவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத சந்துக்களில் இரு சக்கர வாகனங்களில் சென்று தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒரு நுண் பார்வையாளரும், ஒரு போலீஸ்காரரும் இடம் பெறுவார்கள். அவர்கள் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவர்கள் மூன்று ஷிப்ட் அடிப்படையில் இரவு-பகலாக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும், சோதனைகளில் ஈடுபடுவார்கள். கட்சிக்காரர்கள் கூட்டமாக வந்தால் அவர்களை கலைந்து போகச் செய்வார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
இவர்கள் தவிர 30 பறக்கும் படைகளும் கண்காணிப்பு பணி செய்து வருகின்றன.
நேற்று ஒரே நாளில் 14 லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் பிடிபட்டது தொடர்பான வீடியோ ஆதாரம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.