
தினகரன் மீதுள்ள பகை அனைத்தையும் மறந்து, ஆர்.கே.நகரில் அவரை எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்க வேண்டும் என்று உறவுகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து விட்டார் சசிகலா.
இதையடுத்து, சில உறவுகள் நேரடியாகவும், சில உறவுகள் மறைமுகமாகவும் ஆர்.கே.நகரில் களமிறங்கி தினகரன் வெற்றிக்காக பல்வேறு வேலைகளை செய்து வருகின்றன.
அதில்,அனுராதா, டாக்டர் வெங்கடேஷ், மஹாதேவன், விவேக் ஆகிய நேரடி உறவுகள், தொகுதியின் ஒவ்வொரு பகுதியையும் தங்கள் வசமாக்கிக்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நாகராஜன் உள்ளிட்ட எம்.பி க்களும், தொகுதியின் சில பகுதிகளுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளனர்.
தினகரன் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பணம் ஆதரவாளர்களால், எந்த சேதாரமும் இல்லாமல் வாக்காளர்களிடம் சரியாக போய் சேருகிறதா? என்பதை கண்காணிப்பது முதல் பணி.
அதேபோல், பணம் மற்றும் ஆதாயம் பெறும் வாக்காளர்களிடம் கற்பூரம் ஏற்றி, தினகரனுக்குதான் வாக்களிப்போம் என சத்தியம் வாங்குவது இரண்டாவது பணி.
பண விநியோகம் செய்பவர்கள், ஓ.பி.எஸ் பக்கமோ, மற்றவர்கள் பக்கமோ சாய்ந்து விடாமல் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பது மூன்றாவது பணி.
இவ்வாறு பல்வேறு கண்காணிப்பு பணிகளை அமெரிக்க உளவு துறையான எப்.பி.ஐ ரேஞ்சுக்கு, திட்டம் வகுத்து முடுக்கி விட்டுள்ளது தினகரன் தரப்பு.
உளவு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர்களை மேற்பார்வை செய்வதற்காக, தினகரன் மனைவி அனுராதா, மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ், உறவினர்கள் விவேக், மஹாதேவன் ஆகியோர் நேரடியாக ஆர்.கே.நகரின் அனைத்து பகுதிகளிலும் கழுகு போல வட்டமிட்டு வருகின்றனர்.
எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் சரி, வெற்றி என்ற ஒன்றை தினகரன் மட்டுமே அடைய வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது.
அதற்காக இதுவரை 128 கோடி ரூபாய்க்கு மேல், செலவிடப்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.
இது தவிர, தேர்தல் மோதலை சமாளிக்க தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் தொகுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதுள்ள நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம், காவல் துறையை விட, அதிக வலிமையுடன் கோலோச்சி வரும் எங்கள் அணிக்கே வெற்றி என்று என்றும், வெற்றிக்கனியை பறிக்காமல் திரும்பப் போவதில்லை என்றும் தினகரன் ஆதரவாளர்கள் சபதம் செய்துள்ளனர்.