கோயிலுக்கு வரும் மக்களின் கவனத்திற்கு.. இது மூன்றையும் கொண்டு வராதீங்க.. அமைச்சர் போட்ட அதிரடி தடை.

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2021, 10:03 AM IST
Highlights

பக்தர்கள் பூ பழம் மாலை உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை, அனைத்து கோயில்களிலும் இதே போன்ற தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

பல லட்சம் மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, எந்த ஒரு கட்சியின் அழுத்தத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் அடிபணியவில்லை என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அதேபோல, கோவிலுக்கு வரும் மக்கள் பூ, பழம், மாலை உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை என்றும், அனைத்து கோயில்களிலும் இது பின்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா தொற்று எதிரொலியாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கோயிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு தடையை நீக்கியுள்ளது. அனைத்து நாட்களிலும் கோயிலுக்கு வரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று முதல் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்கள் திறக்கப்பட உள்ளதால் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் அதிகக் கூட்டம் வரக்கூடும் என்பதால், நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வழி காட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றுவது தொடர்பாகவும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அங்கு ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், அனைத்து நாட்களிலும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, மக்களின் கோரிக்கையை பரிசீலித்து கோயில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதே தவிர எந்த ஒரு அரசியல் கட்சியின் அழுத்தத்தினாலும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல அழுத்தங்களை சந்தித்தவர், எந்த அழுத்தங்களும் அவரிடம் செல்லாது, பல லட்சம் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அர்ச்சகர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, பக்தர்கள் பூ பழம் மாலை உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை, அனைத்து கோயில்களிலும் இதே போன்ற தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதே தவிர அதன் மூலம் மற்ற மொழிகளில் அர்ச்சனை செய்ய தடை ஏதும் விதிக்கப்படவில்லை. பக்தர்கள் விரும்பிய மொழியில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!