எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கதை சொல்கிறார். நான் ஒரு கதை சொல்கிறேன். ஒரு அழகான தோட்டத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் இருந்தன. அங்கு ஒரு தோட்டக்காரன், தினமும் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான். அதை பார்த்துக்கொண்டிருந்த குரங்குகள், தண்ணீர் பாய்ச்சும் தோட்டக்காரனுடன் நண்பராகின.
புத்தியில்லாதவர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால், இப்படித்தான் இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குட்டி கதையை சொல்லி எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை கூறினார். அதில், மூன்று பேர் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கி, பரிசு விழுந்தால் கடவுளுக்கு சமபங்கு தருவோம் என்று முடிவு செய்தார்கள். அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தது. பணத்தை வாங்குவதற்குமுன் மூன்று பேருக்கும் ஒரே சிந்தனை தோன்றியது. கடவுளுக்கு ஒரு பங்கு தருவோம் என்று சொன்னோமே, அப்படி தரக்கூடாது என்ற முடிவுதான் அது. அவசரப்பட்டு செய்த சத்தியத்தில் இருந்து எப்படி தப்புவது? என்ற சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது.
முதல் நபர், தரையில் ஒரு சிறிய வட்டம் வரைவோம், எல்லா பணத்தையும் நாணயங்களாக்கி மேல் நோக்கி எறிவோம். சின்ன வட்டத்துக்குள் விழுவது கடவுளுக்கு என்றான். 2-வது நபர், மிகப்பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்றுகொண்டு பணத்தை மேல் நோக்கி எறிவோம். அந்த வட்டத்துக்கு வெளியே எவ்வளவு பணம் விழுகிறதோ அது கடவுளுக்கு என்றான். 3-ம் நபர், பணத்தை மேலே வீசி எறிவோம். மேலே நின்றுவிடுகின்ற பணம் கடவுளுக்கு, கீழே விழுகின்ற பணம் நமக்கு என்றான்.
இவர்களிடம் நற்குணம் இல்லாதது மட்டுமல்ல, கடவுளைவிட தாங்களே கெட்டிக்காரர்கள் என்ற ஆணவமும் இருந்தது. இவர்களைப் போன்ற சிலர், செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்வோம் என உண்மைக்கு மாறானவற்றை மக்களிடம் கூறி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர்.ஆனால் அவர்கள் இந்த மூன்று நபர்களைப்போல் சொன்னதை செய்யவில்லை. அதற்கு வேறு விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களை பற்றி நன்கு அறிந்துகொண்ட மக்கள், அவர்களுக்கு தக்க தண்டனையை சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வாங்கிளார்கள் என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்தார். அதேபோல், எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் வழியிலே கதை சொல்லி மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மதுரை, ஒத்தக்கடை மைதானத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் பல்லாயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலினும் குட்டிக்கதையை கூறினார். அதில், எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கதை சொல்கிறார். நான் ஒரு கதை சொல்கிறேன். ஒரு அழகான தோட்டத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் இருந்தன. அங்கு ஒரு தோட்டக்காரன், தினமும் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான். அதை பார்த்துக்கொண்டிருந்த குரங்குகள், தண்ணீர் பாய்ச்சும் தோட்டக்காரனுடன் நண்பராகின.
ஒரு நாள் தோட்டக்காரன் இறந்து விட்டான். குரங்குகள் தண்ணீர் பாய்ச்ச முடிவெடுத்து, பெரிய வேருள்ள செடிக்கு அதிக தண்ணீரும், சிறிய வேருள்ள செடிக்கு கொஞ்சம் தண்ணீரும் ஊற்றலாம் என்றன. அதன்படி ஊற்றின. ஆனால், தோட்டம் கருகியது. காரணம், பெரிய வேர், சிறிய வேர் என கண்டுபிடிக்க குரங்குகள் செடிகளை பிடுங்கி பார்த்து விட்டன. எடப்பாடியின் ஆட்சியும் அப்படித்தான் இருக்கிறது. புத்தியில்லாதவர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால், இப்படித்தான் இருக்கும். கதைகள் கூறி வரும் எடப்பாடி ஆட்சியின் கதையும் முடியப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராகுங்கள் என்றார்.