முந்தைய அரசின் சட்டத்தை பின்பற்றணும்... விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழக வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

By Asianet TamilFirst Published Aug 6, 2021, 9:39 PM IST
Highlights

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகச் சட்டம் அமலில் உள்ளதால், அதுவரை அந்தச் சட்டத்தையே பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் முந்தைய அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. விழுப்புரம் பழைய தாலுகா அலுவலகத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வந்த  இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர இடமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாறிய நிலையில், இந்தப் பல்கலைக்கழத்துக்கு  நிதி ஒதுக்கக் கோரியும், பதிவாளரை நியமிக்கக் கோரியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சட்டத்தை மீறிய செயல். இந்த அறிவுப்புக்குத் தடை விதிக்க வேண்டும்” என சிவி சண்முகம் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த வாரம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குள் வரும் பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்க முடியாது” என வாதிட்டார். 
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கிய பிறகு துணைவேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டார். கட்டிடங்களும் கட்டப்படவில்லை, அடிப்படை வசதிகளும் இல்லை. அதனால், மாணவர்களின் நலன் கருதியே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது” என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  “அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.  ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக” தெரிவித்தார்.  முன்னாள் அமைச்சர் சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், “தற்போதைய நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டம் அமலில் உள்ளதால், அதை பின்பற்ற வேண்டும். திருவள்ளுவர் பல்கலைக்கழக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. என்றாலும் அதுவரை அச்சட்டம் அமலில் இருக்கும் என்பதால், அச்சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். விழுப்புரம் மையம் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை” எனக்கூறி சி.வி.சண்முகத்தின் வழக்கை முடித்து வைத்தனர். இந்த விசாரணையின்போது, ‘ஆட்சி என்பது சைக்கிள் போல மாறி மாறி வரும். என்றபோதும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பின்பற்ற வேண்டும்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
 

click me!