
காவல் துறை தலைவருக்கு ஆதரவு தெரிவிக்க அமைச்சர் சேகர்பாபுக்கு தகுதி வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார்.
மாரிதாஸ் கைது விவகாரத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். சைக்கிள் ஓட்டுவதும் செல்பி எடுப்பதும்தான் டிஜிபியின் வேலையா என்று ஆவேசமாக அண்ணாமலை கேட்டிருந்தார். அண்ணாமலையின் இந்த விமர்சனத்துக்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருந்தார். “வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் கவலைப்பட்டு பதில் கூற வேண்டிய நிலை இல்லை” என்று சேகர்பாபு விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “இந்து அறநிலையத் துறை அமைச்சர் கட்சி மாரி இன்னொரு கட்சிக்கு வந்தவர். வெள்ளை சட்டை அணிந்து நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டால் அவரின் பழைய வரலாறை மக்கள் மறந்து விடுவார்களா? இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது. முதலில் காவல்துறை தலைவரை ஆதரித்து பேச தகுதி வேண்டும். சட்டத்தை மதிப்பவராக சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆன்மிக வேஷம் போட்டுக் கொள்ளக் கூடாது” என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அண்ணாமலை கூறுகையில், “தமிழக அரசு பெயரளவுக்கு மட்டுமே விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்துக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. எனவே மாநில அரசு மத்திய அரசு மீது புகார் சொல்வதை நிறுத்த வேண்டும். மாநில அரசு விவசாயிகளுக்கு என்ன செய்திருக்கிறது என்பதையும் உரத்துக்காக மானியம் வழங்கி இருக்கிறார்களா என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும். பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விஷயத்தில் இந்து அறநிலையத்துறை நாடகம் ஆடுகிறது. யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் எந்த அருகதையும் கிடையாது.” என்று தெரிவித்தார்.