
தி.மு.க தலைவரான பிறகு முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றிக் கூறியுள்ளது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு தினந்தோறும் மு.க.ஸ்டாலின் காலையில் அண்ணா அறிவாலயம் சென்று தலைவருக்கு உரிய பணிகளை கவனித்து வருகிறார். பிற்பகலுக்கு பிறகு வீட்டிற்கு செல்லும் ஸ்டாலின் இரவிலும் சிறிது நேரம் அண்ணா அறிவாலயத்தில் இருக்கிறார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்று ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடம், பெரியார் நினைவிடம் என்று சென்று அங்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின் செய்தியாளர்களை கண்டுகொள்ளவில்லை. தலைவராக பதவியேற்றுக் கொள்ள அண்ணா அறிவாலயம் சென்ற போதும் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. தி.மு.க தலைவரான பின்னர் திருச்சி முக்கொம்புக்கு சென்றதை தவிர சென்னையை விட்டும் எங்கும் செல்லாமல் தலைநகரிலேயே ஸ்டாலின் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சி.பி.ஐ அதிரடியாக சோதனை செய்தது. இது குறித்து கூட வெறும் அறிக்கை மட்டும் வெளியிட்டு விட்டு ஸ்டாலின் அமைதியாகிவிட்டார். நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயம் முன்பு செய்தியாளர்கள் திரண்டிருந்த போதும் ஸ்டாலின் அவர்களிடம் சென்று பேசவில்லை.
இந்த நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஸ்டாலின் தான் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அண்ணா அறிவாலயத்தில் இருந்து நேற்று பிற்பகல் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்னதாக அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் ஸ்டாலின் சென்றார். அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
அதனை ஏற்று தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஸ்டாலின் கூறியதை கேட்டு செய்தியாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் உச்சநீதிமன்றம் ஏழு தமிழர்களை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை எல்லாம் எதுவும் செய்யவில்லை. ஏழு தமிழர்களை விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்று தான் கூறியிருந்தது.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பையே ஒட்டு மொத்தமாக மாற்றி ஸ்டாலின் கூறிச்சென்றார். ஸ்டாலின் தவறுதலாக கூறியது பற்றி அவரது உதவியாளரிடம் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு என்ன என்று விசாரிப்பதாக கூறிவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்தார். தி.மு.க எனும் ஒரு மாபெரும் இயக்கத்தில் தலைவரான பிறகு முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட முழுமையாக புரிந்து கொள்ளாமல் பேசியுள்ளது. அவரது கட்சியினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.