
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸ்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட இந்த சம்பவத்தால் தமிழகமே குலுங்கியது.
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்ற தகவல்கள் அடங்கிய FIR காப்பியை போலீஸார் வெளியிட்டனர்.
இந்த FIR காப்பியில் தூத்துக்குடி தனி வட்டாட்சியர் சேகர், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டது முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திரேஸ்புரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கண்ணன் உத்தரவிட்டார்.
அதேபோல, ஆட்சியர் அலுவலக பகுதியில் சிப்காட் ஆய்வாளர் அரிகரனுக்கு சேகர் உத்தரவிட்டுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். பொறுமையாக இருந்தால் பெரும் சேதம் ஏற்படும் சூழல் நிலவியதால் துப்பாக்கியை பிரயோகிக்க உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் சேகர் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் கலவரக்காரர்களால் ஆட்சியர் அலுவலக சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. உத்தரவுக்கு பிறகு வன்முறை கும்பலை கலைக்க எவ்வளவோ முயற்சித்தும், கடைசியாக துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. திரேஸ்புரத்தில் மீண்டும் வன்முறை சம்பவம் நிகழாமல் இருக்க துப்பாக்கிச் சூடு என FIR-ல் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை கலைக்க புகைகுண்டு, லத்தி, ரப்பர் தோட்டா ஆகியவற்றால் முற்பட்டும் வன்முறை தொடர்ந்தது.
மேலும், 10,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத கும்பல் பயங்கர ஆயுதங்களால், போராட்டத்தில் குதித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என எச்சரித்தும் வன்முறை தொடர்ந்தது. மேலும் 3 முறை வானத்தை நோக்கி சுட்டும் போராட்டக்காரர்கள் கலையவில்லை, அதுமட்டுமல்ல திரேஸ்புரத்தில் 500 பேர் பெட்ரோல் குண்டு அரிவாளுடன் முற்றுகையிட வந்தனர். 100 பெண்கள் உள்பட 500 பேர் காவலர் குடியிருப்புக்குள் நுழைய முயன்றனர் என எஃப்ஐஆரில் பதிவிட்டுள்ளார்கள்.