
ஓபிஎஸ் கையை வெட்டுவேன் என்று கலைராஜன் பேட்டி அளித்தது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஓபிஎஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவோம். அங்குள்ளவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் ”” வந்து பார்க்கட்டும் , இந்த ஓபிஎஸ் யாருன்னு தெரியாதா , அவர் கைய வச்சு பார்க்கட்டும் அவர் உடம்பில் கையே இருக்காது ”” என்று பேட்டி அளித்திருந்தார்.
பின்னர் இது பற்றி தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டி அளித்த போது இது யுத்த களம் யுத்தத்துக்கு வந்த பின்னர் தலை போகுமா ? கை போகுமா யாருக்கு என்னங்க தெரியும். மகா பாரத யுத்தம் நடந்தது கர்ணன் நல்லவன் தான் குத்துறான்னு தான் சொன்னார் கண்ணன். ஆகவே அது தொண்டர்களை உற்சாகப்படுத்த சொன்னது என்றார்.
காந்தியே சொன்னார் செய் அல்லது செத்து மடி என்று , அதைத்தான் சொல்கிறோம் என்றார். இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த நெறியாளர் அவர் செய்யுன்னு தான் சொன்னார் நீங்க செஞ்சுருவேன்னு சொல்றீங்க என்றார்.
பின்னர் பேசிய கலைராஜன் நான் வெட்டுவேன்னு சொல்லவில்லை உடம்பில் உறுப்பு இருக்காது என்றுதான் சொன்னேன் என்று மாற்றி கூறினார்.
இதனிடையே கலைராஜனின் வன்முறை பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக மாணவரணி இணைச்செயலாளரும் , உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான என்.செல்லப்பாண்டியன் என்பவர் கடந்த 10 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
அவரது புகாரில் 9/2/2017 அன்று சென்னையில் பேட்டி அளித்த கலைராஜன் முதலமைச்சர் கையை வெட்டுவேன் என அவரது உயிருக்கு அச்சுறுத்தல் தெரிவிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த புகார் தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பேரில் தேனாம்பேட்டை போலீசார் பிரிவு 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் , வன்முறையை தூண்டுதல்) 506(1)( கொலைமிரட்டல் )ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவை இரண்டும் ஜாமீனில் வெளிவரும் பிரிவுகளே.