
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்கள் மெகா ரெய்டுநடத்திய வருமான வரித்துறையினர் ரூ.1430 கோடி கணக்கில் வராத வருவாயை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர்பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் கடந்த 9-ந் தேதி முதல் 13ந்ேததி வரை வருமானவ ரித்துறையினர் மெகா சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, மன்னார்குடி, ஐதராபாத், பெங்களூரு , புதுச்சேரி ஆகிய இடங்களில் சசிகலாவுக்கும், உறவினர்களுக்கும் சொந்தமான வீடுகளிலும் சோதனை நடந்தது.
சசி குடும்பத்தின் பிடியில் உள்ள, ஜெயா, 'டிவி' மற்றும், 'மிடாஸ்' சாராய ஆலையிலும், தினகரனின் வீடு, மன்னார்குடியில், திவாகரன் வீடு மற்றும் அவர்களது சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் ,பணியாளர்கள் வீடுகள் , ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்கள், கல்லூரிகள் உட்பட 187 இடங்களில் தொடர் வருமான வரி சோதனைகள் நடந்தன.
இந்த 5 நாள் மெகா ரெய்டில் கணக்கில்வராத ரூ.1430 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வருமானத்துக்கான ஆதாரங்கள், மூலங்கள் குறித்து ஆராய சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ஹரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வருமான வரித்துறை கடந்த 5 நாட்களாக சசிகலா, அவரின் உறவினர் வீடுகள், இடங்கள் என 187 இடங்களில் மெகா ரெய்டு நடத்தியது. இதில் ஜெயா தொலைக்காட்சி, டி.டி.வி தினகரன் ஆகியோர் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக சந்தேகிக்கிறோம்.
இந்த சோதனையில் ரூ.7 கோடிக்கும் அதிகமாக ரொக்கப்பணமும், ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டன. 15 வங்கி லாக்கர்களும், வைர நகைகளும் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் அடிப்படையில் ரூ.1,430 கோடி வருவாய் ஈட்டி இருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த சோதனையின் மூலம் ரூ. 1500 கோடி மதிப்பிடப்படலாம்.
போலியாக நிறுவனங்கள் தொடங்கி அதில் முதலீடு செய்து இருப்பது தனி விவகாரம். அது தனிபிரிவு. ஆனால், இந்த சோதனையில், பல்வேறு விதமான தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தான காரணங்கள், அதன் மூலம் குறித்து சரியான விளக்கம் இல்லை. இது குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
ஆதலால், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த, வருமான வரித்துறையினர் பெங்களூரு சிறை அதிகாரிகளை விரைவில் தொடர்பு கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.