கருத்துக்கணிப்பு அல்ல கருத்து திணிப்பு..! அப்செட், ஆவேசம் பிறகு புதுவேகத்தில் எடப்பாடி..!

By Selva KathirFirst Published Mar 24, 2021, 11:16 AM IST
Highlights

தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிய கருத்துக்கணிப்பால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொதித்துப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிய கருத்துக்கணிப்பால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொதித்துப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் வந்துவிட்டாலே பிரபல தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்பு என்று கூறி எதையாவது வெளியிடுவது வழக்கம். ஆனால் எந்த தேர்தலிலும் எந்த தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பும் சரியாக இருந்ததே இல்லை. அதிலும் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளை பொறுத்தவரை ஒரு முறை கூட தேர்தல் முடிவுகளை சரியாக கணித்தது இல்லை. கடந்த 2016ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும் என்றே அனைத்து தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளும் கூறின. ஆனால் அந்த கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஜெயலலிதா மறுபடியும் ஆட்சி அமைத்தார்.

ஆனால்  நாம் கடந்த முறை வெளியிட்ட கருத்துக்கணிப்பு பொய்யாகிவிட்டதே என்றெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் இந்த முறையும் அந்த தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்புகளை எடுத்து வெளியிட்டு வருவது தான் இதில் சுவாரஸ்யம். அதிலும் நேற்று முன்தினம் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பு தான் உச்சகட்ட காமெடி எனலாம். அதாவது அவர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கான மக்கள் சந்திப்பு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னர் என்று கூறலாம்.

பிப்ரவரி மாதம் தமிழக அரசியல் களம் வேறு மாதிரியாக இருந்தது. சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தது, திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்தது. கூட்டணி உறுதியாகாமல் இருந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்துக் கொண்டிருந்தது. ஏன் வேட்பாளர்கள் கூட யார் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்படியான ஒரு சூழலில் மக்களை சந்தித்து யாருக்கு வாக்களிக்கப்போகிறீர்கள் என்று கேட்டு அதனை தற்போதைய கருத்துக்கணிப்பு போல் அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதை காமெடி என்று கூறாமல் எப்படி இருக்க முடியும்.

இதற்கெல்லாம் உச்சமாக கருத்துக்கணிப்பில் தினகரனின் அமமுகவை அந்த தொலைக்காட்சி சேர்க்கவே இல்லை. இதற்கான காரணம் என்ன என்றும் சரியாக விளக்கப்படவில்லை. தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களிலும் காவிரி டெல்டா பகுதிகளிலும் தினகரன் கட்சியினர் தற்போது மிகவும் சுறுசுறுப்பாக களப்பணியாற்றி வருகிறார்கள். அமமுக வேட்பாளர்கள் அதிமுகவிற்கு மட்டும் அல்ல சில தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கும் தலைவலியாக உருவெடுத்துள்ளனர். ஆனால் இதனை எல்லாம் புறக்கணித்து ஏதோ ஒரு சர்வேயை எடுத்து அதனை கருத்துக்கணிப்பாக வெளியிட்டு மறுபடியும் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று அந்த தொலைக்காட்சி கூறியுள்ளது.

இது தான் சான்ஸ் என்று அந்த தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு படி மறுபடியும் திமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் நேற்று முதல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த  இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அந்த கருத்துக்கணிப்பு எதற்கு எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த கருத்துக்கணிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அப்செட்டாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தோடு கருத்துக்கணிப்பின் பின்னணியை அறிந்து அவர் ஆவேசப்படவும் செய்துள்ளார். பிப்ரவரி மாதம் எடுத்த கருத்துக்கணிப்பை எதற்காக அந்த தொலைக்காட்சி இப்போது ஒளிபரப்ப வேண்டும் என்றும் அவர் டென்சன் ஆகியுள்ளார்.

இதனால் தான் நேற்று முழுவதும் எடப்பாடி பழனிசாமி எங்கும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்கிறார்கள். ஆனால் அது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக ஆதரவு ஊடகங்கள் இது போன்று கருத்து கணிப்புகளை வெளியிட்டு எதிரணியை பலவீனப்படுத்துவது வழக்கம் என்பதை எடப்பாடி பிறகு புரிந்து கொண்டார். அத்தோடு புதுவேகத்தோடு தேர்தல் களத்திற்குள்ளும் அவர் இறங்கியுள்ளார்.

click me!