
ஜெயலலிதாவை சிறுபான்மைகளின் விரோதியாக சித்தரிப்பதுதான் தி.மு.க.வின் ஆல்டைம் அரசியலாக இருந்தது. இதற்கு ஜெ.,வும் பெரிதாக எதிர்ப்பு தெரிவித்து தடுப்பாட்டம் ஆடியதில்லை.
ஆனால் தானும் சிறுபான்மையினரின் தோழிதான் என்பதை வருடத்திற்கு இரண்டு முறை மிக மிக நளினமாக, ஆத்மார்த்தமாக வெளிக்காட்டுவார் ஜெயலலிதா. ஒன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ‘இஃப்தார் நோன்பு திறப்பு” மற்றொன்று கிறிஸ்துமஸ் சமயத்தில் சென்னையில் மிக முக்கிய தேவாலயங்களின் பேராயர்கள் சூழ்ந்து நிற்க ஜெ., கலந்து கொள்ளும் தேவன் பிறந்த நாள் வைபவம்.
இஃப்தார் விழாவில், நோன்பு கஞ்சி கிண்ணத்தை ஜெயலலிதா எடுத்துப் பருகும் அழகும், கிறிஸ்துமஸ் விழாவில் கேக் துண்டை பேராயர் ஊட்டிவிட, ஜெயலலிதா அதை பெற்றுக் கொள்ளும் தருணமும் கேமெராக்கள் விரும்பி விழுங்கும் காட்சிகள்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகை இதோ நெருங்குகிறது. அ.தி.மு.க. சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பன்னீர் தனியாகவும், எடப்பாடி அணி தனியாகவும் இந்த நோன்பு திறப்பு நிகழ்வை நடத்துகிறார்கள்.
எடப்பாடி அணி, சென்னை வர்த்தக மைய கட்டிடத்தில் இந்த நிகழ்வை வரும் 21ம் தேதி மாலை நடத்துகிறது.
பன்னீர் அணியோ அதே நாள் எழும்பூர் அசோகா ஹோட்டலில் மாலை 6:38க்கு நடத்துகிறது. இது இப்படியிருக்க எடப்பாடி அணி இரண்டாக பிரிந்து அதில் தினகரன் அணி உருவாகி இருப்பதால் அவர்கள் அவர் தலைமையில் தனியாக நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
தினகரனிடம் இதற்கு ஓ.கே. கேட்டதற்கு, யோசிக்கிறேன் என்றிருக்கிறாராம். ஒருவேளை அப்படி அவர்கள் செய்யாவிட்டாலும் கூட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி குரூப் நடத்தும் விழாவில் பங்கேற்பது கடினமே.
இந்நிலையில், நானே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் தீபாவும் தன் பேரவை சார்பாக இந்த நோன்பு திறப்பு நிகழ்வை நடத்த பிளான் செய்கிறாராம்.
இப்படி செய்தால்தான் அ.தி.மு.க.வினர் தாண்டி பொதுவான மக்களின் சப்போர்ட்டும் தனக்கு கிடைக்குமென்பது தீபாவின் பிக் பிளான். தீபா தனது பால்ய நண்பர், பாதுகாவலர், அரசியல் ஆலோசகர், தோழியின் கணவர், கணவர் மாதவனின் எதிரி, தம்பி தீபக்கின் பழைய நண்பர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் ஆயில் ராஜாவிடம் இது பற்றி ஆலோசித்திருக்கிறாராம். ஆயிலும்...ஸாரி ராஜாவும் ஓ.கே. தீபா என்றிருக்கிறாராம்.
இந்நிலையில், தனது மனைவியின் வீட்டில் இப்படியொரு அரசியல் அதிரடிக்கு தயாராவதை அறிந்து அவரது கணவர் மாதவனும் தனது அரசியல் பேரியக்கம் சார்பாக தனியாக நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்.
தமிழக அரசியலில் ஒரு புயலை உருவாக்க முனைந்திருக்கும் மாதுக்குட்டி சிறுபான்மையினரையும் கவர் செய்யும் முடிவில் இறங்கியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயமே. ஆனா மாதும்மாவுக்கு ஒரேயொரு டவுட்டு....’நோம்பு திறக்குறப்ப போடுவாங்களே ஒரு குல்லா! அதை எந்த டெய்லர்ட்ட தைக்க கொடுக்குறது?” அப்படிங்கிறதுதான்.
ஆக அணியணியாய் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. ஆளாளுக்கு நோன்பு திறக்குறாங்க.
தன்னை பிரித்துப் பிரித்துக் கொண்டாடினாலும் அல்லாஹ் இவர்களை ஆசீர்வதிக்கட்டும்!