காரை சுற்றிவளைத்த விவசாயிகள்.. உயிரை கையில் பிடித்து தப்பிய கங்கனா.. வச்சி செய்த சீக்கியர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2021, 7:30 PM IST
Highlights

அப்போது போராட்டக்காரர்கள் அவரது காரை சுற்றி வளைத்ததுடன் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் கொடிகளை ஏந்தியவாறு அவரை மன்னிப்பு கேள் என கோஷமிட்டனர். 

பஞ்சாப் மாநிலம் கிராத்பூரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் காரை விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்தும்,  மத்திய அரசு அச்சட்டங்களை திரும்ப பெற்றது குறித்தும் விவசாயிகளை மிக இழிவாக கங்கனா ரனாவத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவரது காரை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு அவரை பத்திரமாக வழிஅனுப்பி வைத்தனர். 

எதற்கும் அஞ்சாமல் சர்ச்சை கருத்துகளை துணிச்சலுடன் வெளியிடுவதில் வாடிக்கையாக கொண்டவர்தான் கங்கனா ரனாவத். ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் டுவிட்டர் நிறுவனமே அவரது டுவிட்டர் கணக்கை முடக்கும்  அளவுக்கு சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருகிறார் அவர்.  சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி மிக கேவலாக கருத்து ஒன்றை கூறினார். அதாவது 1947 ல் பெற்றது சுதந்திரம் அல்ல பிச்சை என கூறினார். அவரின் இந்த கருத்து பலரையும் கொந்தளிப்படைய வைத்தது. அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப்பெற வேண்டும் என குடியரசு தலைவருக்கு பலரும் கடிதம் எழுதியுள்ளனர். அதேபோல் ஒன்று நீங்கள் காந்தியடிகளை நேசிப்பவராக இருக்கலாம், இல்லது  சுபாஷ் சந்திர போஸை பின்பற்றுபவர்களாக இருக்கலாம் ஒரே நேரத்தில் இருவரையும் பின்பற்ற முடியாது என்றும் அவர் கூறியதுடன், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று அகிம்சை போதித்து நமக்கு சுதந்திரத்தை பிச்சை எடுத்து கொடுத்தனர் என்று அவர் மகாத்மாவை மிக கேவலமாக விமர்சித்தார். 

மேலும் சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் ஆகியோருக்கு மகாத்மா காந்தியிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் மகாத்மா காந்தியை இழிவு படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை மிக மோசமாக அவர் விமர்சித்து வந்தார். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது துர்திஷ்டவசமானது, துயரமானது என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் பஞ்சாப் கிராத்பூரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சென்ற காரை விவசாயிகள் இன்று தடுத்து நிறுத்தினர். விவசாயிகள் இயக்கம் தொடர்பாக கங்கனா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கங்கனா தனது பாதுகாப்பு ஊழியர்களுடன் காரில் இருந்தார். 

அப்போது போராட்டக்காரர்கள் அவரது காரை சுற்றி வளைத்ததுடன் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் கொடிகளை ஏந்தியவாறு அவரை மன்னிப்பு கேள் என கோஷமிட்டனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தாங்கள் நடத்திய போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையிலும், விவசாயிகளுக்கு எதிராக பேசியதற்காக மன்னிப்பு கேள் என்று அப்போது வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்டாகிராமில் அதற்கான  வீடியோ ஒன்றை வெளியிட்ட கங்கனா, 'என்னை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. எனக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பிரயோகித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் இருந்து செல்ல வேண்டிய விமானம் ரத்தானதால் பஞ்சாப் வர வேண்டிய நிலை ஏற்பட்டது, இங்கு விவசாயிகள் எனக் கூறிக்கொண்டு சில சமூக விரோத கும்பல் என்னை சுற்றி வளைத்து தாக்க முயற்சிக்கிறது, எனக்கு அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுக்கிறது, போலீசார் இல்லை என்றால் அவர்கள் என்னை கொன்றிருப்பார்கள்.  

இதுபோன்ற கும்பல் நாட்டில் பயமின்றி நடமாடுவது வெட்கக்கேடானது. ஏராளமான போலீசார் இருந்தும் அங்கிருந்து எனது கார் செல்ல முடியவில்லை என்ன பதிவிட்டிருந்தார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர் வெளியிட்ட அடுத்து பதிவில்,  ஒரு வழியாக எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன் என்ன கூறியிருந்தார். அதற்கு பவரும் அவரை கடுமையாக விமரிசித்து வருகின்றனர். இனியாவது வாயை அடக்கி பேச கற்றுக்கொள் என்று கங்கனாவை நெட்டீசன்கள் தாக்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக விவசாயிகளுக்கு எதிராகவும், குறிப்பாக சீக்கிய சமூகத்தினருக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவர் அவதூறாக பேசிய கருத்துக்களுக்காக விவசாயிகள் அவரை எச்சரித்தனர். ஏற்கனவே டெல்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி, இன்ஸ்டாகிராமில் சீக்கிய சமூகத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக கங்கனா ரனாவத் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீக்கிய சமூகத்திற்கு எதிராக நடிகை ஆட்சேபனைக்குரிய மற்றும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. 
 

click me!