பாஜகவுக்கு தாவ தயாராகும் நிர்வாகிகள்... பலமிழக்கும் அதிமுக... உடைந்து நொறுங்கும் உடன் பிறப்புகள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 3, 2021, 6:00 PM IST
Highlights

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், நிர்வாகிகள் சண்டையிட்டது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது அதிமுக பொதுக்குழு. முதலமைச்சராக வருவதற்கு சசிகலா ஆசைப்பட, ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல நேரிட்டது.

சிறைக்கு செல்வதற்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியையும், கட்சியின் துணை பொதுச்செயலாளராக தினகரனையும் உருவாக்கிவிட்டுச் சென்றார் சசிகலா. இவருக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ந்த தர்மயுத்தம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ஓ.பி.எஸ். அவரது இணைப்புக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகமிருந்தது.

ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு நடந்த பொதுக் குழுவில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஒட்டுமொத்தமாக ஒழித்து விட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். அதற்கேற்ப கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த பதவிகளின் முறையே ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் உருவாக்கப்பட்டது.

இத்தகைய சட்ட திருத்தங்களை எதிர்த்து சசிகலாவும், முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதேசமயம், அதிமுக ஆட்சியில் இருந்ததால் இந்த இரட்டைத் தலைமைக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகால சிறை தண்டனையை நிறைவு செய்து விட்டு விடுதலையாகி வெளியே வந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற, கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான் என்று உரிமை கோரி வருகிறார்.

 இதனால், கட்சிக்கு இரட்டைத் தலைமை வேண்டாம்; ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற குரல்கள் அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களிடையே உயிர்ப்பித்து அது வலிமையாகத் துவங்கியது. இந்த சிந்தனை வலிமையாவதை எடப்பாடி உள்ளிட்டவர்கள் ரசிக்கவில்லை; விரும்பவில்லை. இதனையடுத்து, கட்சியின் விதிகளை மீண்டும் திருத்தி பொதுச் செயலாளராகிவிட வேண்டும் என ஓ.பி.எஸ். எடுத்த முயற்சிகள் பலனிளிக்க வில்லை. இப்படி இரட்டை தலைமை, சசிகலா என மூக்கோண சிக்கலில் இருக்கிறது அதிமுக. இதனால் நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் உற்சாகமின்றித் தவிக்கின்றனர். 

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தாலும், கட்சி தலைமை பலமாக இருந்து வழி நடத்தினால் ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் அதிகார பலத்தை, பண பலத்தால் எதிர்த்து, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறலாம் என, கட்சியினர் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், நிர்வாகிகள் சண்டையிட்டது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கினால், உள்ளடி வேலைகளால் சொந்த கட்சியினரே தோற்கடித்து விடுவரோ என்ற அச்சம் பலரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் பலரும், பா.ஜ.,வில் இணைந்து, உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி வேட்பாளராக களமிறங்கி, பண பலத்தால் வெற்றி பெறலாம் என கணக்கு போடுகின்றனர்.

வெற்றி பெறாவிட்டாலும், தங்களுக்கு டில்லி பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. கூட்டணி கட்சியாக இருந்தாலும், தங்கள் கட்சியில் சேர வருவோரை புறக்கணிக்க கூடாது என்ற முடிவில், பா.ஜ.க.,வும் சிவப்பு கம்பளம் விரிக்க தயாராகி வருகிறது.


 

click me!