பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு... யாருடைய வேட்புமனுக்கள் ஏற்பு?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 20, 2021, 6:44 PM IST
Highlights

முன்மொழிதலில் தவறு, முறையான ஆவணங்களை இணைக்காதது உள்ளிட்ட காரணங்களால் 740 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 6,220க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 5 மணி நிலவரப்படி 1,100 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. முன்மொழிதலில் தவறு, முறையான ஆவணங்களை இணைக்காதது உள்ளிட்ட காரணங்களால் 740 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரான முதலமைச்சர் பழனிசாமி, போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சென்னை, கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்டாலின், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல் ஹாசன், திருவொற்றியூரில் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவில்பட்டியில் போட்டியிட உள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரன் என அனைத்து கட்சி முதல்வர் வேட்பாளர்களின் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல் தாராபுரம்(தனி) தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், காட்பாடியில் திமுக வேட்பாளர் துரைமுருகன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மயிலாப்பூரில் ம.நீ.ம வேட்பாளர் ஸ்ரீப்ரியா, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனுவில் நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பம் இட்டு பரிந்துரைத்ததாக அமமுக கூட்டணியில் உள்ள மருதுசேனை அமைப்பு தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தை அடுத்து, அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது.

நெல்லை தொகுதி    சமக வேட்பாளர் அழகேசன், மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ராஜ்குமார், ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனுக்களும், துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரான வினோஜ் பி செல்வத்தின் வேட்புமனு நாளை காலை 11 மணி வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் பெயரை குறிப்பிடாததால் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்ம பிரியா வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் நல்லதம்பி வேட்புமனுவும் நிறுத்திவைக்கப்பட்டது.

click me!