பிரபல நடிகருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்... காவல்நிலையத்தில் பாஜக புகார்..!

By Thiraviaraj RMFirst Published Apr 29, 2021, 5:44 PM IST
Highlights

தொலைப்பேசி எண்ணிற்கு 500 மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகவும், அதில் பேசியவர்கள், கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும் பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டினர் என்றும் அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
 

உத்தரப்பிரதேச முதல்வரை விமர்சிக்கும் வகையில் ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் மீது தமிழக பாஜக தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சித்தார்த் சமூக ரீதியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கடலூர் வெள்ளத்தின்போது, அங்குச் சென்று மக்களுக்கு முதலில் உதவியவர் நடிகர் சித்தார்த். மேலும் இவர் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து ட்வீட் செய்து வருகிறார். சமீபத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்த கருத்தை விமர்சித்து சித்தார் ட்வீட் செய்தார்.

’தவறான கருத்தை யார் கூறினாலும், அவர் தலைவராகவே இருந்தால் முகத்தில் அறைவிழும்’ என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சித்தார்த்தின் தொலைப்பேசி எண் சமூகவலைத்தளத்தில் உள்ள பாஜக குழுவில் பதிவிடப்பட்டிருந்தது என்றும் சித்தார்த்தைத் தொடர்பு கொண்டு அவருக்கு மனரீதியாக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக’ சித்தார்த் கூறியுள்ளார்.

அவரது தொலைப்பேசி எண்ணிற்கு 500 மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகவும், அதில் பேசியவர்கள், கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும் பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டினர் என்றும் அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வரை அவதூறாக விமர்சித்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

click me!