திமுகவில் இணைந்த மாஜி அதிமுக அமைச்சர்... இணைப்புக்காக மதுரைக்கே சென்ற மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Feb 23, 2020, 9:44 PM IST
Highlights

கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார் ராஜ கண்ணப்பன். அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த ராஜ கண்ணப்பன், 2009-ம் ஆண்டில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன், திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்தார். இன்று முறைப்படி திமுகவில் இணைந்தார். மதுரையில் நடந்த இணைப்பு விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்.

 
1991-1996 காலகட்டத்தில் ஜெயலலிதா முதன்முறை தமிழக முதல்வரானபோது அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என முப்பெரும் துறைகளின் அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். அந்தக் காலகட்டத்தின் பவர்புல் அமைச்சராக விளங்கினார். ஆட்சியில் மட்டுமல்லாமல், கட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். பின்னர் அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன், மக்கள்  தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால், எல்லாத் தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது.
பின்னர் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார் ராஜ கண்ணப்பன். அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த ராஜ கண்ணப்பன், 2009-ம் ஆண்டில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார்.


2011-ல் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட ராஜ கண்ணப்பனுக்கு ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். ஆனால், அந்தத் தேர்தலில் ராஜ கண்ணப்பன் தோல்வி அடைந்தார். 2019-ம் ஆண்டில் சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட ராஜ கண்ணப்பன் விரும்பினார். ஆனால், இரு தொகுதிகளுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த ராஜ கண்ணப்பன், திமுக தலைவரைச் சந்தித்து ஆதரவு அளித்தார். இந்நிலையில் அவர் திமுகவில் முறைப்படி மீண்டும் இணைந்துள்ளார். 

click me!