
2017ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2017-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில், 2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கி கௌரவிப்பார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் 50 பேர் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.2,500 உதவித் தொகையும் மருத்துவப்படியாக ரூ. 100 பெறுவதற்கான அரசாணைகள் வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.