முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி திடீர் மரணம்… மாரடைப்பால் காலமானார் !!

By Selvanayagam PFirst Published Oct 13, 2018, 7:52 AM IST
Highlights

முன்னாள் திமுக அமைச்சரும், தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமான பரிதி இளம்வழுதி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 58

பரிதி இளம்வழுதி சென்னை எழும்பூர் மற்றும் பெரம்பூர் தொகுதியில் இருந்து  ஆறு முறை  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  இவர் 11வது சட்டமன்றத்தின் (1996-2001 ) காலகட்டத்தில் பேரவைத் துணைத் தலைவராக இருந்தார்.

மேலும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 2006-2011 காலகட்டத்தில் இருந்தார். இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக 28 ஆண்டுகள் (1984-2011) திமுக  சார்பில் இருந்தார். இவர் தனது 25வது வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியவாணிமுத்துவை எதிர்த்துப் போடியிட்டு பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

பின்னர் எழும்பூர்  தொகுதியில் 1989 முதல் 2011வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்ட விதத்தைக் கண்டு தி.மு.க தலைவர் மு.கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார்.

இவர் தி.மு.க வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவியில் இருந்தார். இந்நிலையில் தி.மு.கவில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகி  கடந்த 2013 ஆம் ஆண்டு அ.தி.மு.கவில்  இணைந்தார்.  உடனடியாக அவருக்கு  அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா மறைந்த பிறகு பரிதி இளம் வழுதி  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது வரை டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில்  இன்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி  பரிதி இளம் வழுதி உயிரிழந்தார்

click me!