மாட்டுக்கறி மாமின்னு சொன்னீங்க?? ஜெயலலிதா கிச்சன்ல போய் பாத்தீங்களா? பயங்கரமாக பேசிய வெற்றிவேல்...

By sathish kFirst Published Oct 12, 2018, 6:33 PM IST
Highlights

ஆளுநர் புகாரின்பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நக்கீரன் கோபால் குறித்து டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

ஆளுநர் புகாரின்பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நக்கீரன் கோபால் குறித்து டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பற்றி, நக்கீரன் வார இதழில் கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வந்தது. 

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கூறி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிர்மலா தேவி போலீசில் வாக்குமூலம் அளித்தபோது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை 4 முறை சந்தித்ததாக கூறியதாக நக்கீரன் இதழில் செய்தி வெளியாகி வந்தது. இதன் அடிப்படையில், ஆளுநர் மாளிகை தரப்பு, நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 

இதனிடையே நக்கீரன் அலுவலக ஊழியர்கள் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுமீதான வழக்கு விசாரணையின்போது, நக்கீரன் அலுவலக ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என்று ஜாம்பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி அளித்திருந்தார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மதிமுக பொது செயலாளர் வைகோ, நக்கீரன் கோபாலை சந்திப்பதற்காக போலீஸ் நிலையம் சென்றபோது அவர் போலீசாரால் தடுக்கப்பட்டார். 

நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனைக்காக, திருவல்லிக்கேணி மருத்துவமனை சென்றபோது, மு.க.ஸ்டாலின் அங்கு சென்று ஆறுதல் கூறினார். இதேபோல் பல்வேறு கட்சி தலைவர்கள் நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். ஆனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளரான டிடிவி தினகரன் மட்டும், நக்கீரன் கைதுக்கு மகிழ்ச்சி தெரிவித்து பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவெல், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நக்கீரன் கோபாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 

ஜெயலலிதாவுக்கு கால விரல் எடுக்கப்பட்டதாக கூறினார்களே அது உண்மையா? ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு பல மாநிலத்தில் இருந்து வந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவுக்கு கால் விரல் இல்லை என்பது பற்றி அவர்கள் ரிப்போர்ட் எழுதினார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதாவுக்கு கால் விரல் இல்லை என்று கூறினீர்கள்? எதை வைத்து அப்படி எழுதினீர்கள்? ஜெயலலிதா குறித்து வீடியோ ஒன்றை நான் வெளியிட்டேன். அந்த வீடியோல் அவர் நலமாக இருப்பார். அது குறித்து மறுப்பு தெரிவித்தீர்களா? மன்னிப்பு கேட்டீங்களா? என்று காட்டமாக கூறினார்.

வீரப்பன் விஷயத்தில் திமுக, நக்கீரன் கோபாலை பயன்படுத்திக் கொண்டது. அதன் பிறகு ஜெயலலிதா அரசு பதவியேற்றது. அப்போது செய்தியாளர்கள், ஜெயலலிதாவிடம், வீரப்பன் விஷயத்தில் நக்கீரன் கோபாலை பயன்படுத்துவீர்களா என்று கேட்டதற்கு, மஞ்சள் பத்திரிகையை, தலைமை செயலகத்துக்குள் நுழையவிட மாட்டேன். அரசாங்கத்தின் தூதராக செயல்பட எந்த தகுதியும் நக்கீரன் கோபாலுக்கு கிடையாது. ஏற்கனவே வீரப்பனை வைத்து ப்ளாக்மெயில் செய்து வந்தனர். இதன் பிறகுதான் வீரப்பன், சுட்டு பிடிக்கப்பட்டான்.

ஜெயலலிதாவுக்கு கால் இல்லை என்று நக்கீரன் கோபால் சொல்வதற்கு, இவர் என்ன டாக்டராகவா பணியாற்றினார்? ஜெ. நன்றாக உள்ள காலோடு நான் வீடியோ வெளியிட்டிருந்தேன். அதன் பிறகு, ஜெ. படத்தை வைத்து காலில் விழுவதுபோல் நீக்கீரன் கோபால் புகைப்படம் எடுத்திருந்தால் இதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. சொன்னது எல்லாம் தப்பு என்று எப்போது கூறினீர்கள். மீசை வெச்சவனெல்லாம் ஆம்பள இல்ல. சில நேரங்களில் நக்கீரன் புத்தகத்தை படித்து நம்பியதும் உண்டு. 

10 நாட்கள் கழித்து பார்த்தால், நக்கீரன் இதழில் படித்தது எல்லாம் பொய் என்பது தெரியவரும். ப்ளாக் அன்ட் வொயிட் பொய்யா இருக்கும். எதை நம்பி இந்த புத்தகத்தை வாங்கி படிக்கணும். 

2003 ஆம் அண்டு டிடிவி தினகரன் பற்றி நக்கீரனில் செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தி குறித்து மறுப்பு தெரிவித்து, அதனை வெளியிட வேண்டாம் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். ஒரு வருடத்துக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டது நக்கீரன் கோபாலுக்கு. அதன் பிறகு மேல்முறையீட்டுக்கு நாங்கள் செல்லவில்லை. 

தவறை உணர வேண்டும் என்பதுதான் டிடிவி தினகரனின் எண்ணமாக இருந்தது. தண்டனைக்குப் பிறகும் அவர்கள் அதை உணரவில்லை. யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இரைப்பீர்களா? ஜெயலலிதாவை மாட்டுக்கறி சாப்பிடுகிற மாமி என்று சொன்னீர்கள்... நீங்கள் கிச்சன் சென்று பார்த்தீர்களா? என்று அந்த பேட்டியில் வெற்றிவேல், நக்கீரன் கோபாலுக்கு எதிரான கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார்.

click me!