தம்பி, பிடிஆர் கவனத்தில் கொள்.. தமிழக நிதி அமைச்சருக்கு எதிராக ஜெயக்குமார் செய்த தரமான சம்பவம்.!

By Asianet TamilFirst Published Sep 21, 2021, 8:29 PM IST
Highlights

தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம்.. அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 

 நீண்ட நாள் கழித்து அண்மையில் லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கலந்துகொள்ளவில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் பற்றி தாமதமாகத்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். குடும்ப நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியிருந்தது என்று அவர் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.  நிதி அமைச்சர் பங்கேற்காதது குறித்து தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார். 
  “பிடிஆர் சொன்ன அந்த காரணத்தை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது” என்று அண்ணாமலை காட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவும் தற்போது பழனிவேல் தியாகராஜனை விமர்சித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜெயக்குமார்தான் பங்கேற்று வந்தார். அவரே தன் கைப்பட எழுதி அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம்.. அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

 
பொதுமக்கள் - வணிகர்கள் - ஆகியோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். நான் ஒருமுறைகூட பங்கேற்காமல் இருந்தது இல்லை.. நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு துரோகம் அல்லவா? தம்பி.. பிடிஆர்.. கவனத்தில் கொள்".. என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

click me!