முன்னாள் முதல்வரின் கொள்ளுப்பேரன் அடாவடி..! 'ஏன் தாமதமாக வந்தாய்..?' என ஸ்விகி ஊழியரிடம் தகராறு..!

By Manikandan S R SFirst Published Nov 5, 2019, 1:10 PM IST
Highlights

தாமதமாக உணவு டெலிவரி செய்ய வந்த ஸ்விகி ஊழியரிடம் முன்னாள் முதல்வரின் கொள்ளுப்பேரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் முனுசாமி நாயுடு. இவரது கொள்ளுப்பேரன் பாலாஜி. சென்னை அசோக்நகர் 7 வது அவென்யூவில் வசித்து வரும் அவர் ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வருகிறார். பாலாஜி, ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். உணவை கொடுப்பதற்காக ராஜேஸ்கண்ணா என்கிற இளைஞர் வந்துள்ளார்.

ராஜேஸ்கண்ணாவுடன் அவரது தந்தை தனசேகரும் சென்றிருந்ததாக தெரிகிறது. அப்போது பாலாஜி அவர்களிடம், "ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய்..?" என்று கேட்டு திட்டியிருக்கிறார். அதற்கு ராஜேஸ்கண்ணா விளக்கமளித்துள்ளார். ஆனாலும் மேற்கொண்டு பாலாஜி கடுமையான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்கண்ணாவின் தந்தை, பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கே வந்த பாலாஜியின் நிறுவன மேலாளர், ராஜேஸ்கண்ணாவை கன்னத்தில் ஓங்கி அறைந்து இருக்கிறார். இதையடுத்து அருகில் இருந்த ஸ்விகி ஊழியர்கள் மூன்று பேரை அழைத்து பாலாஜியை, ராஜேஸ்கண்ணா தாக்கிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் அசோக் நகர் காவல்நிலையத்தில் பாலாஜி புகார் அளித்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், ஸ்விகி ஊழியர்கள் மூன்று பேர் தன்னை தாக்கி, 10 சவரன் நகையை திருடி விட்டு சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ச்சி செய்தனர். அதில் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்றாலும், நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. 

இதையடுத்து ராஜேஸ்கண்ணா, அவரது தந்தை தனசேகரன், ஸ்விகி ஊழியர்கள் சீனிவாசன், மதியழகன், ஜெயசூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். ஆனால் ராஜேஷ் கண்ணா, பாலாஜி மீது அளித்த புகாரில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!