72 வயதில் எனக்கு சிறை தண்டனையா?... உயர் நீதிமன்றத்தில் கதறிய முன்னாள் எம்.எல்.ஏ... உடனடியாக கிடைத்த தீர்வு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 29, 2021, 6:27 PM IST
Highlights

 72 வயதாகி விட்டதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் எம்.எல்.ஏ. தரப்பில் வாதிடப்பட்டது

கடந்த 1991-96ம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த பரமசிவம்,   வருமானத்துக்கு அதிகமாக 33 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம், எம்.பி. எம்.எல்.ஏ..க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 22 லட்சத்து 58 ஆயிரத்து 746 ரூபாய் சொத்து குவித்துள்ளதாக கூறிய நிலையில், 33 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி முடிவுக்கு வந்தது குற்றப்பத்திரிகைக்கு முரணானது எனவும், எதை வைத்து இந்த முடிவுக்கு வரப்பட்டது என விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டது. 

சொத்துக்கள் மதிப்பீடு செய்ததில் தவறுகள் உள்ளதாகவும், வழக்கு விசாரணையின் போது மனுதாரருக்கு அவர் தரப்பு வாதங்களை முன் வைக்க போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் முறையிடப்பட்டது. மேலும் அவருக்கு 72 வயதாகி விட்டதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் எம்.எல்.ஏ. தரப்பில் வாதிடப்பட்டது.

 லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்து ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட  தண்டனையை நிறுத்திவைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டார்.மேலும், அபராத தொகை 33 லட்சத்து 4 ஆயிரத்தில், 7.5 லட்சத்தை ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

click me!