எனக்குத்தான் ஈரோடு... அடித்து பேசும் இளங்கோவன்... அதிரும் மதிமுக!

By Asianet TamilFirst Published Feb 14, 2019, 12:12 PM IST
Highlights

திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸும் மதிமுகவும் விரும்பும் நிலையில், அந்தத் தொகுதியில் ஓசையில்லாமல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸும் மதிமுகவும் விரும்பும் நிலையில், அந்தத் தொகுதியில் ஓசையில்லாமல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2004-ம் ஆண்டு கோபிச்செட்டிப்பாளையம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வெற்றி பெற்று மத்திய அமைச்சராக ஆனார். ஆனால், 2009-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியிடம் தோல்வியடைந்தார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில், இளங்கோவன் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 50 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். 

இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதால், தன்னுடைய சொந்த மாவட்டமான ஈரோடு தொகுதியில் போட்டியிட இளங்கோவன் முடிவு செய்திருக்கிறார். இளங்கோவனுக்கு இந்தத் தொகுதியை காங்கிரஸ் மேலிடம் பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மதிமுக, கணேசமூர்த்திக்காக ஈரோடு தொகுதியைப் பெற்று தரும் முயற்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்று திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளினார். இந்தத் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு கணேசமூர்த்திக்கு இருப்பதால், ஈரோடு தொகுதியை அவருக்கு நிச்சயம் வைகோ பெற்றுதருவார் என்ற நம்பிக்கையில் மதிமுகவினர் உள்ளனர். 

ஆனால், ஈரோடு தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்து தேர்தல் பணிகளையும் இளங்கோவன் தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். தேர்தலில் எப்படியும்  தனக்கு சீட்டு கிடைத்துவிடும் என்பதால் ஈரோடு காங்கிரஸ் கூட்டங்களில் இளங்கோவன் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். பிரசாரத்துக்கு பிரியங்காவை அழைத்து வரவும் இளங்கோவன் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த முறை ஈரோடு தொகுதி காங்கிரஸுக்குதான் ஒதுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியினர் அடித்து பேசுவதால், ஈரோடு மாவட்ட மதிமுகவினர் எல்லாவற்றையும் வைகோ பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஈரோடு யாருக்கு? முடிவு மு.க. ஸ்டாலின் கையில்.

click me!