
கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது, மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தது எல்லாம் ஆளுநரின் அதிகாரத்தை மீறிய அதிகப்பிரசங்கித்தனமான செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்வேறு அதிரடியான கருத்துகளை தெரிவித்தார்.
கோவையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுகாதாரப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவது ஆளுநரின் அதிகாரத்தை மீறிய செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. ஆனால், ஆளுநரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என ஆட்சியாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பான தனது கருத்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் இருக்கிறது என்பதால், தம்முடைய நடவடிக்கைக்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பதால்தான் ஆளுநர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளார். மக்களிடம் மனுக்களை பெறலாமே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செய்ய வேண்டிய ஆய்வுப்பணிகளை ஆளுநர் செய்வது என்பது அதிகாரத்தை மீறிய அதிகப்பிரசங்கித்தனமானது என இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.