ஆதாரங்கள் அத்தனையும் ரெடி.. இந்த மாஜி அமைச்சர் தப்பிக்கவே முடியாது..!! போலீஸ் ஆட்டம் ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 7, 2021, 1:50 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்புக் காவலர், அரசு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்புக் காவலர், அரசு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மலேசிய பெண்ணான நடிகை கடந்த 28 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி குடும்பம் நடத்தி, கோபாலபுரம் தனியார் மருத்துவமனையில் மூன்று முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். திருமண செய்துகொள்ள கேட்டபோது தன்னை அடித்து காயப்படுத்தியதோடு, தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் உதவியாளர் பரணி என்பவர் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

 

இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், நடிகையின் புகார் மற்றும் அவர் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் நம்பிக்கை மோசடி, பாலியல் பலாத்காரம், வேண்டுமென்றே காயப்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். புகாருக்கு ஆளானவர் முன்னாள் அமைச்சர் என்பதால் தகுந்த ஆதாரங்களுடன் அவரை கைது செய்யும் பொருட்டு, அவர் மீது போடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகளுக்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திலும், சென்னையிலும் இல்லை என்பதால் அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பொருட்டு தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் சென்று முன்னாள் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்புப் காவலர், அரசு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அளிக்கும் விவரங்களை வாக்குமூலமாக எடுத்துக்கொண்டு வீடியோப் பதிவு செய்து அவற்றை ஆதாரங்களாக சேகரிக்கவுள்ளனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய நாளை வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அவருக்கு எதிரான முழுமையான ஆதாரங்களை காவல் துறையினர் சேகரித்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

click me!