
‘‘மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்தார். நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. அத்தனையும் பச்சைப்பொய். முதல்வரும் அமைச்சர்களும் 95% நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள், எல்லாம் பொய்’’ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் திருத்தனியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘‘ அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி 210 இடங்களில் வெல்லும். திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நன்மை கிடைத்ததா? அவர்கள் குடும்பம் மட்டும் வளமாகியது. சிந்தியுங்கள், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, அடுத்து இன்பநிதி. இந்த வாரிசு அரசியல் தேவையா? குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? மன்னர் பரம்பரையா? மற்றவர்கள் ஆளக்கூடாதா? ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை வாட்டி வதைக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படவில்லை, விவசாயிகள் பிரச்னையைக் காண முதல்வர் செல்லவில்லை. ஆனால், திரைப்படம் பார்த்து ரசிக்கிறார். விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள், நெற்பயிரை தலைமைச் செயலகத்தில் டிரேயில் கொண்டுவந்து காட்டுகிறார்கள், அப்படிப்பட்ட முதல்வர்தான் ஸ்டாலின். விவசாயம் என்றாலே கடின உழைப்பு. ரத்தத்தை வியர்வையாக சிந்துபவர்கள். அப்படிப்பட்ட விவசாயிகளை மதிக்காத முதல்வர் ஸ்டாலின். நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யாத அரசு திமுக அரசு.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தான் உணவு கொடுப்பவர்கள். உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் யாரும் வாழ முடியாது. நாட்டுக்கு உணவு அளிப்பவர்கள் படும் துன்பத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசு திமுக அரசு.அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம், மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
சென்னை முதல் திருத்தணி செல்லும் ரயிலில் ரீல்ஸ் எடுத்தபடி 4 சிறுவர்கள் துன்பப்படுத்துகிறார்கள். கொடூரமாகத் தாக்குகிறார்கள். சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. திமுககாரர்கள் தான் போதை விற்பனைக்கு துணை நிற்பதாக பேசப்படுகிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்த பலமுறை சொன்னேன், கண்டுகொள்ளவில்லை. பெற்றோர்களே சிந்தியுங்கள், நம் குழந்தைகளை நாம் தான் பார்த்து வளர்க்க வேண்டும் இந்த ஆட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை.
நெல்லையில் ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிகள் சரக்கு அடிக்கிறார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். பணம், நகை திருடுவது போல உடம்பில் உள்ள கிட்னி திருடுகிறார்கள். வறுமையில் வாடும் நபர்களை தேர்வுசெய்து பணத்தாசை காட்டி கிட்னி எடுக்கிறார்கள். அதுவும் திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் நடக்கிறது, இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரகசியம் தெரியும் என்றார்கள் ரத்து செய்தார்களா? ரகசியத்தை சொன்னாரா? சட்டமன்றக் கூட்டத்தில் எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின். இதுதான் அந்த ரகசியம். இதைத்தான் அதிமுகவும் சொன்னது. ஆனால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று அந்தர்பல்டி அடித்துவிட்டது திமுக.
2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்தார். நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. அத்தனையும் பச்சைப்பொய். முதல்வரும் அமைச்சர்களும் 95% நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள், எல்லாம் பொய்.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார்கள், உயர்த்தவில்லை. அதிமுக தான் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது, அதனால் தான் 125 நாளாக உயர்த்தினார்கல். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் இத்திட்டம் ரத்துசெய்யப்படும் என்ற பொய் தகவலை சொல்லி வருகிறார். ஸ்டாலின் அவர்களே உங்களால் உயர்த்த முடியவில்லை ஆனால் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் நிறைவேற்றிக் காட்டினோம். 100% இத்திட்டம் தொடரும். 125 நாட்கள் என்பது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 150 நாளாக உயர்த்தப்படும்.
எப்போது பார்த்தாலும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார் ஸ்டாலின். உங்கள் வீட்டுப் பணத்தையா கொடுத்தீர்கள்? அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துத்தான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது 17 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி கொடுக்கிறார்கள். ஏன் அப்போதே நிபந்தனையைத் தளர்த்தியிருக்கலாமே?’’ எனக் கேள்வி எழுப்பினார்.