வளர்ந்த நாடுகள் கூட இந்த கொடுமை செய்யவில்லை.. மோடியை டார் டாராக கிழித்த வேல் முருகன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2021, 12:33 PM IST
Highlights

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து வரும் ஒன்றிய அரசு, பெண்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சாமானிய மக்கள் ஆகியோர் மீது கூடுதல் சுமையை ஏற்றி வருவது சர்வாதிகாரத்தின் உச்சம். மோடி பிரதமராக பதவியேற்றத்திற்கு பிறகு, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் ஈட்டிய தொகை எவ்வளவு, அத்தொகை எங்கே என்பது குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை.

சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு. கொரோனா காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், எரிவாயு விலையை மேலும் ரூ.25 உயர்த்தி,  ரூ. 902.50 ஆக நிர்ணயம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகையை நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது. ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போததக்குறைக்கு கொரோனா ஊரடங்கால் தொழில் முடக்கம், வேலையின்மை அதிகரிப்பு, வருவாய் இழப்பு ஆகிய காரணங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக திரும்பவில்லை. 

இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது குறித்தோ, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்தோ சற்றும் சிந்திக்காமல், எரிவாயு விலையை கண்மூடித்தனமாக ஒன்றிய அரசு உயர்த்தி வருவது கண்டனத்துக்குரியது. பெட்ரோல், டீசல் மீதான வரியை நாளுக்கு நாள் உயர்த்தி வரும் ஒன்றிய அரசு, தற்போது எரிவாயு விலையை மேலும் ரூ.25 உயர்த்தி உள்ளது. அதாவது, கடந்த டிசம்பர் மாதம் 650 ரூபாய் என்கிற அளவில் இருந்த சமையல் எரிவாயு, தற்போது 902.50-க்கு ரூபாய் எனக் கட்டுக்கடங்காத அளவில் உயர்த்தி உள்ளது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.285 அளவிற்கு எரிவாயு விலை உயர்த்துள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் எரிவாயுவை பயன்படுத்த முடியாத அபாய நிலைக்கு ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தள்ளியுள்ளது.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து வரும் ஒன்றிய அரசு, பெண்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சாமானிய மக்கள் ஆகியோர் மீது கூடுதல் சுமையை ஏற்றி வருவது சர்வாதிகாரத்தின் உச்சம். 

மோடி பிரதமராக பதவியேற்றத்திற்கு பிறகு, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் ஈட்டிய தொகை எவ்வளவு, அத்தொகை எங்கே என்பது குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. பெட்ரோல்,டீசல், எரிவாயு மீது ஒன்றிய அரசு விதித்துள்ள வரி, வளர்ந்த நாடுகளில் கூட இல்லை. எனவே, தமிழக அரசு போன்று, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதோடு, எரிவாயு விலையை திரும்ப பெற ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாயை குறைத்த தமிழ்நாடு அரசு, எரிவாயு விலையையும் குறைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. என அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!