
அதிமுக தொடங்கிய பின்னர், தனது அண்ணன் மற்றும் குடும்பத்தினரையே எம்ஜிஆர் அரசியலில் சேர்க்கவில்லை. குடும்ப அரசியலாக மாற கூடாது என அப்போதே அவர் முடிவெடுத்துள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுக பிரிந்துள்ள இரு அணிகளும் ஒன்று சேர இருப்பதாக கூறுகிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். இதுவரை யாரும், எந்த குழுவினரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அதை பற்றி பேசவும் இல்லை.
ஒரே அணியாக செல்வதானால், எனக்கு நிபந்தனை இருக்கிறது என நான் செய்தியாளர்களிடம் கூறினேன். ஆனால், அதன் அர்த்தம் மாறிவிட்டது. பத்திரிகைகளில் செய்தி வேறு விதமாக வந்து கொண்டு இருக்கிறது. இதில், அடிப்படை விளக்கம் எதுவும் இல்லை.
எங்களது நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். ஜெயலலிதாவின் மறைவில் உள்ள மர்மம். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரம். இது மட்டுமே.
ஒரு குடும்பத்திடம் கட்சியும், ஆட்சியும் போக கூடாது என கட்சியை ஆரம்பித்த அப்போதே எம்ஜிஆர் முடிவெடுத்தார். அதனால்தான், தனது அண்ணன் மற்றும் குடும்பத்தினரை கட்சியிலும், ஆட்சியில் சேர்க்கவில்லை. அதையே ஜெயலலிதாவும் கடைபிடித்தார்.
ஜனநாயக முறைப்படி கட்சியும், ஆட்சியும் நடக்க வேண்டும் என எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நினைத்ததார்கள். மக்களின் விருப்பப்படியே, ஆட்சியை நடத்தினார்கள். அதையே நாங்களும் விரும்புகிறோம்.
இப்போதும் சரி, எப்போதும் சரி, எங்களது நிலை ஒரே மாதிரியாக இருக்கிறது. இது தர்மயுத்தம். நாங்கள் தொடங்கிவிட்டோம். அதன் முடிவு வரும்வரை ஓயமாட்டோம். ஜெயலலிதாவின் மறைவில் உறுதியான நீதி விசாரணை நடத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.