முதல்வர் அனுப்பிய கடிதத்தில் பிழை.. தவறை சுட்டிகாட்டிய பாஜக பிரமுகர்... மு.க.ஸ்டாலின் ஆக்‌ஷன்..!

By Asianet TamilFirst Published Jul 6, 2021, 9:01 PM IST
Highlights

ஒரு மசோதா எந்த துறையை சார்ந்தது என்பது கூட தெரியாமல் முதல்வர் கடிதம் எழுதியுள்ளது வருந்தத்தக்கது என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து நாராயணன் திருப்பதி முதலில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி 'தகவல் தொழில் நுட்ப' அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்த மசோதாவானது 'தகவல் ஒளிபரப்பு' அமைச்சகம் தொடர்புடையது . அந்த துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். ஒரு மசோதா எந்த துறையை சார்ந்தது என்பது கூட தெரியாமல் முதல்வர் கடிதம் எழுதியுள்ளது வருந்தத்தக்கது. 


அரசு அதிகாரிகள் கூட இதை கவனிக்காமல், 'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்ற ரீதியில் கடிதம் எழுதியுள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரதத்தில் உண்மையான அக்கறையோடு இல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாலேயே இப்படிப்பட்ட பெரும் தவறு நடைபெற்றுள்ளது. இனி வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காது, கவனத்துடன் செயல்படுவது தமிழக அரசுக்கு நல்லது. முதல்வர், இதற்கு காரணமானவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பார்  நம்புகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார். 
இதனையடுத்து மீண்டும் நாராயணன் திருப்பதி இன்னொரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “இன்று காலை தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவை திரும்ப பெற வேண்டும் என 'தகவல் தொழில்நுட்ப' துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதிய கடிதம் குறித்து பதிவிட்டிருந்தேன். இந்த கடிதமானது 'தகவல் மற்றும் ஒளிபரப்பு' துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டிய நிலையில் தவறுதலாக  ரவி சங்கர் பிரசாத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த பிழையை எனது சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்  ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அதே கடிதத்தில் சிறு திருத்தம் செய்து பதிவிட்டிருக்கிறார். 
ஆனால், முதல்வர் அலுவலகத்தில் இது போன்ற கவனக்குறைவு நடந்திருப்பது வருந்தத்தக்கதே. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டு தவறை சரி செய்து விட்டோம் என்று பதிவிட்டிருந்தால், இனி இது போன்ற தவறுகள் நடைபெறாது அதிகாரிகள் கவனமாக இருப்பார்கள். என்னுடைய நோக்கம் முதல்வரை குறை சொல்வது அல்ல. கவனக்குறைவை சுட்டிக்காட்டுவது மட்டுமே. இதற்கு முதல்வர் மட்டுமே காரணமல்ல என்பதை நான் அறிவேன். பொறுப்பானவர்கள் பதட்டமில்லாமல் பொறுமையாக பணியாற்றுவது அவசியமாகிறது. தவறுதல் மனித இயல்புதான்” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்திருந்தார்.

click me!