எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு !! இன்று பிரதமரை சந்திக்கப் போவதன் பின்னணி ரகசியம் ?

By Selvanayagam PFirst Published Oct 8, 2018, 6:50 AM IST
Highlights

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்கப் போகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய தமிழக சட்டப் பேரவையை கலைத்துவிட்டு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்துக்கும் தேர்தல் நடத்த வலியுறுத்தப்  போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியைப் போல் அதிக அளவு இக்கட்டான சூழ்நிலையை யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமாக உண்மை. மிரட்டும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, குட்கா ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், டி.டி.வி.தினகரன் கொடுக்கும் குடைச்சல், திமுக அடுத்தடுத்து தொடுக்கும் ஊழல் வழக்குகள் என விழி பிதுங்கிப் போய் நிற்கிறார் இபிஎஸ்.

அதுமட்டுமல்ல அமைச்சர்களும் தங்கள் இஷ்டம்போல் பேசி வருவதும் அவருக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் குடைச்சல்கள் எல்லாம் தாங்க முடியாமல் தான் இப்படி ஒரு திடீர் முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, பல முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இபிஎஸ் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு, கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மோடியைச் சந்திக்க பிரதமர் அலுவலகம், அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்துதான்அவர் டெல்லி சென்றுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான, நிதி ஒப்புதல் வழங்க வேண்டும். மத்திய அரசு நிலுவை வைத்துள்ள, உள்ளாட்சிகளுக்கான நிதி; மீனவர்களுக்கான திட்டம்; பேரிடர் நிதி; ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான உதவித்தொகை ஆகியவற்றை, தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளுடன், இபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். 


மேலெழுந்தவாரியாக தமிழத்துக்கு நிதி பெறுவதற்காக இபிஎஸ் பிரதமரை இன்று சந்திக்கிறார் என்று கூறப்பட்டாலும், தற்போதைய தமிழக அரசின் நிலை குறித்து பேசப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இதில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக அதிமுக ஆட்சியைப் பாதிக்கும். எனவே ஆட்சியைக் கலைத்துவிட்டு அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு இபிஎஸ் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோ? இபிஎஸ் தனது அதிரடி ஆப்பரேஷனுக்கு தயாராகி வருகிறார்.

click me!