
இபிஎஸ் – ஓபிஎஸ் அணியினருக்குத்தான் இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் அண்மையில் தீர்ப்பளித்தது. தற்போது சின்னம் கிடைத்தற்கு தாங்கள்தான் காரணம் என இரு தரப்பினரும் போட்டி போடத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வந்த உடனேயே இரட்டை இலை சின்னம் கிடைத்ததுக்கு பன்னீர்தான் காரணம் என அவரது ஆதரவாளர்கள் சிலர் போஸ்டர் அடித்தார்கள்.
இதைப் பார்த்துக் கடுப்பான எடப்பாடி ஆதரவாளர்கள், ‘இலையை மீட்டு வந்த எடப்பாடி’ என்று பதிலுக்கு போஸ்டர் அடித்து ஒட்டி ஓபிஎஸ் தரப்பினரை கடுப்பாக்கினர்.
இது தொடர்பாக டிஸ்கஸ் பண்ணிய ஓபிஎஸ் தரப்பினர், நாம அவங்களோடு சேராமல் இருந்திருந்தால் எப்படி இலை கிடைத்திருக்கும்? இலை கிடைக்க நாமதானே காரணம். இது அவங்களுக்குப் புரியாம பேசிட்டு இருக்காங்க என எகிறியுள்ளனர்.
அதனால் ஏற்கெனவே ஆர்கே நகரில் நாம வேட்பாளராக களமிறங்கிய மதுசூதனனுக்குத்தான் இந்த முறை சீட் கொடுக்கணும். அப்போதான் நாம யாருன்னு அவங்களுக்குப் புரிய வைக்க முடியும். ஆட்சி மன்றக் குழு கூட்டம் கூட்டினாலும், அங்கே எல்லோரும் மதுசூதனன் பெயரையே சொல்லுங்க...’ என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த தகவல் எப்படியோ கசிந்து எடப்பாடிக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் கடுப்பான எடப்பாடி அமைச்சர்கள் ஜெயகுமாரையும், வேலுமணியையும் அழைத்துப் பேசியிருக்கிறார்.
சின்னம் நமக்கு கிடைச்சதுக்கு காரணம் அவங்கதான்னு ஊரெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. என்னதான் நாம பாகுபாடு பார்க்காம இருந்தாலும் அவங்க அப்படி இல்லை. இப்போ கூட, அவங்க ஆளு மதுசூதனனை ஆர்.கே.நகரில் நிறுத்தி ஆகணும்னு பேசியிருக்காங்க. அதை எப்படி அனுமதிக்க முடியும்? என கேட்டிருக்கிறார்.
ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடக்கும்போது ஓபிஎஸ் தரப்பில் எதாவது பேசினால், நான் நேரடியா பதில் சொல்ல முடியாது …அதனால் நீங்க உங்க பலத்தை காட்டுங்க என அமைச்சர்களுக்கு அசைண்மென்ட் கொடுத்துள்ளார் எடப்பாடி.
இருதரப்பிலும் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் படிதான் நேற்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. வேட்பாளரை முடிவு செய்யும் போது அந்த சலசலப்பு இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் மேடையில் சிரித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் பொறுமிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.