மக்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. எனவே திமுக அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
சேலம் அதிமுகவின் கோட்டை
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மல்லிகுந்தம் பகுதியில் அதிமுக கொடியை பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு இரண்டு முறை தேதி குறித்து மாநாடு நடத்த முடியாமல் மூன்றாவது முறையாக நடத்துகின்றனர். புரட்சி தலைவர், அம்மா ஆகியோர் இருக்கும் காலத்திலும், அவர்களின் மறைவுக்கு பிறகும் இரு பெரும் தலைவர்களின் கோட்டை சேலம் மாவட்டம்.
இந்த கோட்டைக்குள் யாராலும் நுழைய முடியாது. நுழைந்தால் மக்கள் விரட்டியடிப்பார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் தான் வாரிசு. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தனர். அதிமுக நாட்டு மக்களுக்காக திட்டம் தந்தோம். திமுக தனது வீட்டு மக்களுக்காக திட்டம் தீட்டி அதில் கொள்ளையடிக்கின்றனர்.
தேர்தலில் திமுகவிற்கு பதிலடி
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், இரண்டு ஆண்டு, 8 மாதம் ஆகிய நிலையில் 100 ஏரி நிரப்பும் திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுள்ளனர். இந்த பணியானது ஆமை வேகத்தில் நடக்கிறது. ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தந்தோம். இதன் மூலம் 2160 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றது.
மாணவர்கள் விஞ்ஞான கல்வி பெற 42 லட்சம் மடி கணினி தந்தோம். இது போன்ற பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியது. எனவே விடியா திமுக அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என தொண்டர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்