ஆன்லைன் தடை சட்டம் மசோதா குறித்து அனைத்துக் கட்சிகள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பாக ஓபிஎஸ் க்கு பேச வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், எடப்பாடி தரப்பினர் எதிர்ப்பால் வேட்டியை மடித்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைன் சூதாட்ட மசோதா - அதிமுக ஆதரவு
ஆன்லைன் தடை சட்ட மசோதா தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் இந்த தடை மசோதாவை இளைஞர்களின் நலன் கருதி அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்ததார். ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இருந்த போதிலும் மாநில உரிமைகளில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றமே தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் கொண்டு வந்துள்ள இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது என தெரிவித்தார்.
உருக்கமாக பேசிய முதல்வர்.. மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..!
ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ்
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த ஆன்லைன் தடை சட்டம் மசோதாவை அதிமுக சார்பாக வரவேற்பதாக ஓபிஎஸ் பேசினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு கட்சிக்கு ஒருவருக்கு தான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு எந்த தகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
இதனால் பேரவையில் அதிமுகவினர் இரு தரப்பினரும் எழுந்து நின்று முழக்கமிட்டனர். மேலும் அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஓபிஎஸ்-க்கு மசோதா மீது பேச வாய்ப்பு கொடுத்ததாக சபாநாயகர் மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி பேசினார்.
ஆவேசமடைந்த மனோஜ்பாண்டியன்
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள், ஓபிஎஸ் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று முழக்கிட்டனர். இதன் காரணமாக பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன் ஒரு கட்டத்தில் வேட்டியை மடித்து கட்டி அதிமுக வினருடன் வாதத்தில் ஈடுபட்டார். ஓபிஎஸ் தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என தெரிவித்தார். அது இன்னும் மாற்றப்படவில்லை,
தேர்தல் ஆணையத்திலும் அவர்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவு உள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கியவர்கள் தானே நீங்கள் என கடுமையாக விமர்சித்தார். இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்த பேரவை தலைவர் அப்பாவு , ஓ.பன்னீர் செல்வம் முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் தான் அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டதாக கூறினார்.
வெளிநடப்பு செய்த அதிமுக
எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற வாய்ப்பு அவருக்கு அளிக்கப்படவில்லையெனவும், முன்னாள் முதலமைச்சர் ஒரு கருத்து தெரிவிக்கலாம் என கூறினார்.அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இது மரபை மீறிய செயல் அப்படி ஒரு விதி பேரவையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இதனால் சிறிது நேரம் சட்டபேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து அதிமுகவினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள்
கூட்டணி கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள்..! டெல்லி செல்லும் முன் அண்ணாமலை பரபரப்பு பேட்டி