
வெறிச்சோடிய எடப்பாடி பழனிசாமி பொதுக் கூட்டம்…டோக்கன் கொடுத்தும் பொது மக்கள் வராததால் அதிர்ச்சி…
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு கூட்டம் மிகக் குறைவாக வந்ததால் எடப்பாடி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று மாலை போஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இந்த பொதுக் கூட்டத்துக்காக 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பொதுக்கூட்டத்துக்கு தொடக்கம் முதலே பொதுமக்கள் குறைவாகவே வரத் தொடங்கினர். டோக்கன் கொடுக்கப்பட்டவர்கள் கூட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்களும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுக்கூட்டத்தின்போது ஏராளமான நாற்காலிகள் காலியாக இருந்ததால் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்காக கூடிய கூட்டம் தற்போது இல்லை என ஆதங்கப்பட்ட தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில்தான் மக்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.