எடப்பாடி பழனிசாமி ,கேபி முனுசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்...! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jul 11, 2022, 12:03 PM IST
Highlights

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியனை  கூண்டோடு நீக்கி பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் வானகரத்தில் பொதுக்குழு நடைபெறவுள்ள ஶ்ரீவாரு கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். அப்போது ஓபிஎஸ் தரப்பு தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில் திடீரென சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலைக்கு ஓபிஎஸ் சென்றார். அவர் வருவதை அறிந்து வைத்திருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை மற்றும் கட்டைகளால் தாக்குதல் நடத்தினர். இதற்க்கு ஓபிஎஸ் தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து கற்களை எரிந்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகம் சென்ற ஓபிஎஸ் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்குள் சென்ற ஓபிஎஸ் தனது அறைக்கு சென்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த தகவல் அதிமுக பொதுக்குழுவிற்கு சென்றிருந்த தொண்டர்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் ஒன்று கொண்டுரவப்பட்டது. அதில்  ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டவர்களையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கழக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லையென கூறினார். மேலும் கழக விதிகளுக்கு எதிராக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி முனுசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கூறினார்.

click me!