இலங்கை அதிபர் இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி சென்ற நிலைமை தான் தமிழ்நாட்டில் திமுகவிற்கு ஏற்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களை ஏமாற்றிய திமுக
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, கொங்கு மண்டத்தில் சுற்றுபயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். இதற்காக நேற்று பழனி வந்த இபிஎஸ் தொண்டர்களிடம் திமுக ஆட்சி தொடர்பாக அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.இதனையடுத்து இன்று காலை பழனி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பிறகு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்கள் முன் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது சட்டமன்ற தேர்தலில் திமுக தப்பி தவறி ஆட்சிக்கு வந்துவிட்டதாக தெரிவித்தவர், மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் கூறினார். இதை பார்த்து மக்கள் ஏமாந்து திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் இதுவரை வாக்களித்த மக்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென கூறினார். பழிவாங்கும் நோக்கத்துடன்திமுக அரசு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மீது ஸ்டாலின் அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இலங்கை நிலைமை திமுகவிற்கு வரும்
கருணாநிதியால் கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை என்ற அவர், எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அதிமுகவை பல மடங்கு உயர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய 3-வது கட்சியாக மாற்றி காட்டியதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது, மும்முனை மின்சாரம், 24 மணி நேரமும் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது, மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என மக்களால் சொல்ல முடியவில்லையென தெரிவித்தார். வீட்டு வரி மற்றும் சொத்து வரியை பல மடங்கு திமுக அரசு உயர்த்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். திமுகவிற்கு ஸ்டாலின் தான் தலைவர் ஆனால் அதிமுகவிற்கு தொண்டர்கள் அனைவரும் தலைவர்கள் தான் என கூறினார்.காற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியாதோ அது போல் தான் அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியால், அதிபராக இருக்கும் போதே இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நிலைமை தமிழ்நாட்டில் திமுகவிற்கு வரும் என கூறினார். மக்கள் புரட்சி தமிழ்நாட்டிலும் வெடிக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எனவே திமுக அரசு தனது மக்கள் விரோத போக்கை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு ஆக்க இளைஞர்கள் சபதம் எடுக்க வேண்டும்.. அண்ணாமலை வலியுறுத்தல்.